‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
புதிய வைரஸின் புரதம் (proteins) 99வீதம் முந்திய கொரோனா வைரஸின் புரதத்தோடு ஒத்திருக்கிறது. எனவே பைசர் தடுப்பூசி புதிய வைரஸுக்கு எதிராகவும் தொழிற்படும் என நம்புகின்றோம். எனினும் மாற்றமடைந்த கொரோனா வைரஸ் உடல் எதிர்ப்பு சக்தியை மீறித் தீவிரமடையும் பட்சத்தில் தேவைப்பட்டால் புதிய தடுப்பூசி ஒன்றை ஆறு வாரங்களில் உருவாக்கிவிட முடியும் என்று “பைசர் – பயோஎன்ரெக்’ கூட்டு நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் உகுர் சாஹின் (Ugur Sahin) தெரிவித்து ள்ளார்.
தடுப்பூசிகளைத் தயாரிக்க உதவும் தற்போதைய” மெசஞ்சர் “என்ற நுட்பம் (messenger technology) எந்த வேளையிலும் அதன் தயாரிப்பை விரைவு படுத்த உதவுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸுக்கான முதலாவது தடுப்பூசி புழக்கத்துக்கு வந்திருக்கின்ற நிலைமையில் திடீரென வைரஸின் புதிய திரிபடைந்த வடிவம் பிரிட்டனிலும் வேறு சில நாடுகளிலும் பரவிவருகிறது. இதனால் “பைசர் – பயோஎன்ரெக்” தடுப்பூசியின் தொழிற்திறன் புதிய வைரஸை எதிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக வைரஸ் இனங்கள் சனத்தொகையினரிடையே பரந்த அளவில் பரவுகின்ற போது மாற்றத்துக்கு உள்ளாகி புது வடிவெடுப்பது வழமையே என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனில் பரவிவரும் புதிய வைரஸ் குறித்து அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் பொதுவாக வைரஸின் புரத மூலக்கூற்றுக்களின் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதால் புதிய வைரஸ் அதன் புரத மூலக்கூறுகளை மாற்றிக்கொள்ளுமேயானால் தற்போதைய தடுப்பூசி பயனளிக்காது போய்விடலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.