இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி ஒரு பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. சனிக்கிழமை காலையில் இந்த கப்பலின் ஒரு பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளிப்பட்டது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பயணிகளிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் கப்பலில் இருந்த பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகளை லைப் ஜாக்கெட்டுகள் அணிய வைத்து, கப்பலில் இருந்து உயிர்காக்கும் படகுகளில் குதிக்க வைத்தனர்.
இவ்வாறு 274 பயணிகள் காயம் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒருவரை மட்டும் காணவில்லை என்றும் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.கப்பலின் என்ஜின் அறையில் முதலில் தீப்பற்றியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.