நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது -அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது -அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றது என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

எரிபொருள் விலையேற்றத்தை எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பொருளாதார காரணிகளை கருத்திற் கொண்டு எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மற்றும் வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் அனுமதியுடன் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் முதலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவா எதிர்க்கட்சி தலைவர் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவா எதிர்க்கட்சி தலைவர் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை முதலில் நடத்துவது அவசியமாகும்.

எதிர்தரப்பினர் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது பயனற்றது. இதனை சிறந்த முறையில் எம்மால் வெற்றிகொள்ள முடியும்.

மக்களின் தேவைகளை உணர்ந்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமாயின் அவை குறித்து உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும். அரசாங்கம் பலமாக செயற்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி , ஐக்கிய தேசிய கட்சி ஆகிய தரப்பினருடன் எவ்வித தொடர்பும் எமக்கு கிடையாது. குறைபாடுகளை திருத்திக் கொண்டு சிறந்த முறையில் செயற்படுவோம் என்றார்.  

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *