நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க தமிழ்பேசும் மக்கள் அதிக பங்களிப்பு செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வௌனியிட்ட அவர்,
தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டு எதிர்தரப்பினர் பெரும்பான்மை சமூகத்துக்கும் சிறுபாண்மை சமூகத்துக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு மாகாண சபை தேர்தல் அவசியமாக இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து மாகாண சபை தேர்தலை நடத்தினார். தமிழ் பேசும் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தெரிவு செய்து கொண்டார்கள்.
எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக் கூட நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை.
அரசியல் காரணிகளுக்காக மாகாண சபைமுறைமை பிற்போடப்பட்டது. மார்ச் மாதம் மாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தல் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது. வெகுவிரைவில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்.
அனைத்து இன மக்களும் பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைந்தால் சமூகத்தின் மத்தியில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறாது.
இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அனைத்து இன மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து அரசாங்கம் செயற்படும் என்றார்.