ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் அடிதடியில் ஈடுபட வருமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, முன்னாள் சபாநாயகரும், இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ அழைத்தமையினால் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் களேபரம் ஏற்பட்டது.இதனையடுத்து 05 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்ததோடு 10 நிமிடங்களின் பின்னரே நாடாளுமன்றம் மீண்டும் கூடியது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் பறிபோனமைக்கு எதிராகவும், சபாநாயகரின் பக்கச்சார்பான செயற்பாடுகளுக்கு எதிராகவும் சஜித் அணியினர் இன்று நாடாளுமன்றத்தில் கைகளில் கறுப்பு பட்டியை அணிந்தபடி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனிடையே சபையில் கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த காலத்தில் தாம் சிறையில் இருந்தபோது நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள இடமளிக்கவில்லை என்றும், அப்படியான அடக்குமுறைகளை அப்போதைய அரசாங்கம் செய்ததாகவும் சபையில் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கீடு செய்த அப்போதைய சபாநாயகராக இருந்த இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஆவேசத்துடன் நிராகரித்ததுடன் தன்னுடன் மோதிக்கொள்ள வெளியே வரும்படியும் அழைத்துடன் சில தகாத வார்த்தைகளையும் கூறியிருந்தார்.
அதன் காரணமாக நாடாளுமன்றத்தில் இன்று கடும் கூச்சல் குழப்பநிலை ஏற்பட்டதை தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.சபை ஒத்திவைக்கப்பட்ட போதிலும் சபா மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.