மஹிந்த தோல்வியடைந்த போது பக்கபலமாக நின்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்ததாகவும், கோட்டாபயவின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பு பற்றி பேசுவதற்கு விமல் வீரவன்சவிற்கு உரிமையில்லை எனவும், அவர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிர்வாக செயலாளர் ரேனுகா பெரேரா நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியில் உள்ள இரண்டு மருத்துவர்கள் வெளிநாட்டு உளவாளிகளுடன் தொடர்பு பேணுவதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை எனவும், அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியவரிடம் முதலில் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அதன் பின்னர் குறித்த மருத்துவர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
தமது கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் தாம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த தோல்வியடைந்த போது பக்கபலமாக நின்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்ததாகவும், கோட்டாபயவின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பற்றி பேசியதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றிற்கு புதிதாக வந்தவர்கள் சத்தம் போடுவதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.