தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான 05 நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் . இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளார்
அவர் தனதுரையின்போது,
இந்த மண்ணுக்காக மரணித்த நினைகூரப்படுகின்ற மாவீரர்களுக்கு இந்த சபையில் அஞ்சலி செலுத்துகின்றேன் என்று குறிப்பிட்டார்.
காணி பிரச்சினையென்பதுதான் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. காணி ஆக்கிரமிப்புகள் அரங்கேறியதால்தான் மண்ணை மீட்பதற்காக ஆயுதம்கூட ஏந்தி போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றும் காணி பிரச்சினைகள் தொடர்கின்றன. சரணாலயம், தொல்பொருள் என்ற போர்வையில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
எமது பகுதியிலுள்ள மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமையிலிருந்து அவர்களால் மீளமுடியாதுள்ளது. எனவே, அவர்களுக்கு அரசாங்கம் நேசக்கரம் நீட்ட வேண்டும். மீனவர்கள் படுகின்ற துன்பங்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். போர்காலத்தில் எமது மீனவர்கள் ஒரு கிலோ மீற்றர்தான் செல்ல முடியும். ஆனால், இந்திய மீனவர்கள் ரோலர் படகுகள் மூலம் எந்த நேரத்திலும் வருகைதர முடியும். மீண்டும் அந்த சூழல் எழுந்துள்ளது. கொரோனாவை காரணங்காட்டி கடற்படையினர் எமது மீனவர்கள் தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை பறிக்கின்றனர்.
அன்றாடம் உழைக்கும் மீனவர்கள் பணத்திலேயே அன்றாடம் உண்ண வேண்டியுள்ளது. எந்த மீனவனும் மாட மாளிகைகளை கட்டவில்லை. ஆகவே, மீனவர்களை உயர்த்துவதற்கான காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மீன்களை அரசாங்கம் வாங்குகின்றன செயற்பாட்டை செய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்படுபவற்றை உள்ளூரில் உற்பத்தி செய்ய அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்