நாட்டை முடக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தால் அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி அட்டையை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மரபணு பரிசோதனையானது, வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்கு சுகாதாரத் துறையால் முன்னெடுக்கப்படும் ஒரு அணுகுமுறையாகும். இந்த செயற்பாட்டினால், நாட்டில் கொரோனாவின் அல்பா, டெல்டா மற்றும் ஒமிக்ரோன் ஆகியவற்றின் புதிய திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இந்த விஞ்ஞான முறையானது நோயாளர்களை அடையாளம் காண, புதிய திரிபு வகைகளை கண்டறியவும் தொடர்ந்தும் பயன்படுத்தப்படும். இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நால்வருக்கும் எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது தொடர்பில், சுகாதார பிரிவினரால் ஆராயப்பட்டு வருகின்றது.
செயலூக்கி தடுப்பூசியை கட்டாயமாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த வைரஸ் பரவுமானால், பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மீண்டும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
இந்த வைரஸ் உடலில் நுழையும் போது வைரஸின் செயற்பாடு நபருக்கு நபர் மாறுபடும். மூன்றாவது தடுப்பூசியான தற்போ ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது, பொதுவாக தடுப்பூசி செலுத்துகையின் பின்னர் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பொதுவான சிக்கல்களால் அச்சப்பட வேண்டாம்.
நாட்டை முழுமையாக முடக்காமல், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதோடு, தேவையான தடுப்பூசிகளைப் பெறுக்கொள்வது சிறப்பானதாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.