இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக, போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் தெரிவித்த விடயத்தை, ஸ்ரீலங்கா ஜனாதிபதி அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தரப்பத்தில், பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த விடயத்தை ஒப்புக்கொண்டதாகவும், கொழும்பில் பின்நாளில் தன்னை சந்தித்தபோது, அவர் தன்னிடம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தாகவும், ராப் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ராப்பின் கூற்று எவ்வித அடிப்படையும் அற்றது என ஜனாதிபதி அலுவலகம் விளக்கமளித்துள்ளதாக, கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியான தி ஐலன்ட் நாளேட்டில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிகாரி பதவி விலகி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்றதொரு அறிக்கையை வெளியிடுவதற்கான நோக்கத்தை ஜனாதிபதி அலுவலகம் கேள்விக்குட்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம், நியூயோர்க் பல்கலைக்கழகம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்ற ஸ்டீபன் ராப் கருத்து வெளியிடுகையில், இராணுவத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் குறித்து அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதை நினைவுகூர்ந்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ”நான் அவர்களைக் கொலை செய்தேன்” என தெரிவித்ததாகவும் ராப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போதைய குற்றச்சாட்டு ஜெனீவா அமர்வுகளுக்கானது எனவும், இலங்கையை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தின் ஒட்டுமொத்த பகுதியாகும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஸ்டீவன் ராப், அதிகாரத்தில் இருந்த காலத்தில், இலங்கை பாதுகாப்பு செயலாளருடன் இதுபோன்ற கலந்துரையாடலை மேற்கொண்டமை தொடர்பில் அறிக்கையிட்டாரா? அல்லது ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டாரா? என்பது குறித்து யுத்த குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலகம் விளக்கமளிக்க வேண்டும் என ஜனாதிபதி அலுவலகம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மனித உரிமை பிரச்சாரம் என்பது ஒரு இலாபகரமான தொழிலாகும் என ஜனாதிபதி அலுவலகம் குற்றஞ்சாட்டியுயள்ளது. மேற்கத்தேய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும் அந்தக் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடையே ஏராளமான நிதி வழங்கப்படுவதாகவும், முன்னாள் தூதுவர் ராப்பின் கருத்தானது ஈராக் மீது படையெடுப்பிற்கு வழிவகுத்த பேரழிவு ஆயுதம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட அமெரிக்க-பிரித்தானிய பிரச்சாரத்தை இலங்கைக்கு நினைவூட்டுவதாகவும், ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாக தி ஐலன்ட் நாளேட்டின் செய்தி மேலும் கூறுகின்றது.