வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில், தமிழ்த் தேசிய நினைவு நாளான மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாயுள்ளது என PEARL (PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA) அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழர் நினைவுகூரல் மீதான தொடரும் அரச அடக்குமுறையின் நீட்சியே இத்தடைகளாகும். நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், இலங்கை அதிகாரிகளாற் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பேர்ள் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், சட்டச் செயன்முறைகளையும், கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் தவறாகப் பயன்படுத்தி, நினைவுகூர்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இப்புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்து நிற்பவர்களுடன் பேர்ள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விழைகிறது.
இலங்கையின் இராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியெனக் குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளவருமான சவேந்திர சில்வா, கோவிட்-19 கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி, மாவீரர் நாள் நினைவேந்தல்கள் தடைசெய்யப்படும் எனக் கடந்த வாரம் தெரிவித்திருந்ததோடு, இவ்வுத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நினைவேந்தல் நிகழ்வுகளுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்களைச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு துப்புரவு செய்ய முயற்சித்தவர்கள் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கில் துயிலும் இல்லங்களுக்கு அருகிற் பாதுகாப்புப் படையினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். துயிலும் இல்லங்கள் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டன.
இது அரசின் மேலாதிக்க உணர்வும், பழியுணர்வும் வெளிப்படும் விவரணங்களைப் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடுமையான செயலாகும்.
மேலும், உள்ளூர் நீதிமன்றங்கள் பொது நிகழ்வுகளுக்குக் குறிப்பாகத் தடைவிதித்துள்ளதோடு, பல தனிநபர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியற் கட்சிகளுக்கும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும், அவற்றிற் கலந்துகொள்வதற்கும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன.
கோவிட்-19 கட்டுப்பாடுகள் இத்தடைகளை நியாயப் படுத்துவதற்கான சாக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், சிவப்பு-மஞ்சட் கொடிகள் மற்றும் பதாகைகளைப் பயன்படுத்துவது போன்ற தீங்கற்ற நினைவுகூரற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படுவது, தமிழர் நினைவேந்தற் செயற்பாடுகளை, அவை பெரும்பான்மையினரின் விவரணங்களுக்குக் கீட்படியாத நினைவு மற்றும் எதிர்ப்புச் செயற்பாடுகளாக இருப்பதால் ஒடுக்குவது என்ற அரசின் நோக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
நாம் குறிப்பாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நினைவேந்தற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இலக்கு வைக்கப்படுவது குறித்துக் கவலையுற்றுள்ளோம். நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தனிநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள, அவர்களை மாவீரர் நாள் நினைவேந்தல்களிற் கலந்துகொள்வதிலிருந்து தடை செய்யும் நீதிமன்ற ஆவணங்களை நாம் கண்டுள்ளோம்.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை குறித்துக் கவனத்தை ஈர்ப்பதும், அதிகாரிகளுக்கு எரிச்சலூட்டுவதுமாகவுள்ள இப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களின் இன்னொரு வடிவமே இது.
‘இவ்வாறு சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது, நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூரப்படும் மாவீரர் நாள் மற்றும் மே 18 ஆம் திகதி நினைவுகூரப்படும் தமிழின அழிப்பு நினைவு நாள் போன்ற நினைவேந்தல் நாட்கள் தொடர்பில் மேலதிக தடைகளுக்கும், கைதுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் தளமமைத்துக் கொடுக்கும்,’ எனச் செப்தெம்பர் மாதத்தில் பேர்ள் எச்சரித்திருந்தது.
தடைகளேதுமற்ற நினைவுகூரலானது, வடுக்கள் ஆற்றப்படுவதற்கும், போரில் இழக்கப்பட்டவர்களைக் கௌரவப்படுத்துவதற்கும் இன்றியமையாததொன்றாக, அவற்றுடன் பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளதுடன், 2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. எனவே, மாவீரர் நாள் நினைவேந்தல்களைத் தடைசெய்வது, நினைவுகூர்வதற்கான தமிழர்களின் உரிமையின் ஏற்றுக்கொள்ளமுடியாத மீறலாகும் எனும் சந்தேகத்திற்கிடமில்லாச் செய்தியை இலங்கைக்கு அனுப்புமாறு பேர்ள் சர்வதேசச் சமூகத்தை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.