முள்ளிவாய்க்கால் மண்ணில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்’ 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை உடன் இரத்துச் செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 37 பேருக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவில் அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றவர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றும் 20 இற்கும் மேற்பட்டவர்களுக்குத் எதிராக தடையுத்தரவு பெறுவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் பிரிவுகளினால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்தத் தடையுத்தரவுகளை உடன் இரத்துச் செய்யுமாறும், நினைவேந்தல் செய்வதற்கு அனுமதிக்குமாறும் கோரியே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிப்பதை தடுப்பதற்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவு கோரி தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் வாதாட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் முடிவில் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீற்றர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகமும், முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் சார்பில் சட்டதரணி தனஞ்சயன் தலைமையில் ஏனைய சட்டதரணிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பிலும் சட்டதரணிகளான சுகாஸ் ,காண்டீபன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.