நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்!

நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்!

வவுனியா – ஶ்ரீநகர் கிராம மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,கடந்த 70 நாட்களாக நாம் எமது கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் எங்களது பிரச்சனைகளை தீர்ப்பத்தற்கு அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ முன்வரவுமில்லை ஆர்வம் காட்டவும் இல்லை.

ஶ்ரீநகர் கிராமம் உருவாகி இந்த வருடத்துடன் 26 வருட காலம்கடந்தும் எமது மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கல், வீடு அற்றவர்களுக்கு வீட்டுத்திட்ட உதவி, சீரற்ற வீடுகளை திருத்தம் செய்ய நிதி உதவி,பொது நோக்கு மண்டபம், முன்பள்ளி கட்டமைப்பு, போன்ற பல்வேறு தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லை.

குறித்த கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 70 நாட்களாக எமது கிராமத்தில் நாம் போராடிவருகின்றோம். இதனை நிறைவேற்றித்தருவதாக பிரதேச செயலாளர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியதுடன்,எமக்கு 14நாட்களுக்குள் இந்த கோரிக்கைகளில் முதற்கட்டமாக அலைகரைப்பகுதி காணிப்பிரச்சனை மற்றும் விளையாட்டு மைதானப் பிரச்சனைகளை முடித்துத் தருவதாக கூறினார்.

எனினும் இன்று 70 நாட்கள் ஆகியும் எமது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காத பட்சத்திலேயே இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்துள்ளோம்.வவுனியா குளத்தினை நிரவி வியாபாரத்திற்காகவும், சுற்றுலாத்துறைக்காகவும் கட்டடங்கள் அமைக்கப்பட்டுவரும் நிலையில், 26 வருடங்களாக நிரந்தர வீடுகள் அமைத்து வசித்துவரும் எமக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு ஏன் அதிகாரிகள் பின்னடிக்கின்றார்கள்.

நாமும் இந்த மாவட்டத்தின் சாதாரண மக்களே. எனவே இதையும் அரச அதிகாரிகள் கண்டு கொள்ளாத பட்சத்தில் எமது போராட்ட வடிவத்தை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டே இருப்போம் – என்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், ஶ்ரீநகர் மக்கள் மனிதர்கள் இல்லையா, காணி உறுதிப்பத்திரத்தை வழங்கு, 26 வருடங்களாக எம்மை ஏமாற்றுவது சரியா, நியாயமான கோரிக்கைகளிற்கு தீர்வு என்ன? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *