சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள யுன்னான் மாகாணத்தில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த மாகாணத்தில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான டாலி பாய் பிராந்தியத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகளுக்கு மேல் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் நிலநடுக்கத்தின் அதிர்வால் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் டாலி பாய் பிராந்தியத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கினர்.இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் அவற்றில் 89 கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக நேற்று முன்தினம் இரவு சீனாவின் மற்றொரு வடமேற்கு மாகாணமான குயிங்காயில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.