நீருக்காக போராடும் நிலை உருவாகும் -இரா.சாணக்கியன்

நீருக்காக போராடும் நிலை உருவாகும் -இரா.சாணக்கியன்

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மாவடிஓடை அணைக்கட்டு சேவிஸ் வீதி மற்றும் வாவிச்சேனை அணுகு வீதி – கொடுவாமடு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து இருவரும் நேற்றைய தினம் குறித்த பகுதிகளுக்கு சென்றிருந்தனர். இதன்போது குறித்த இருவரையும் அச்சுறுத்தும் வகையில் சிலரின் செயற்பாடு அமைந்திருந்தது.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள மக்களையும் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்தநிலையில் செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மாவட்ட பொறியியலாளரை சந்திக்க பாலமடு பகுதியினைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் முயற்சித்துள்ளனர்.

ஆனால் அவர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பொறியியலாளரால் பதிலளிப்பதில்லை. நேரில் சந்திக்க சென்றாலும் அவர்களை சந்திப்பதில்லை. அதற்கு நேரமும் ஒதுக்குவது இல்லை.

பொறியியலாளரின் தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும் போதே அவர் இவ்வாறு நடந்து கொள்பவர் என்பது நன்கு தெரிகின்றது. நீங்கள் சொல்லுகின்றீர்கள் சுமார் ஆறாயிரம் பேர் வரையில் மண் அகழும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என்று.

இருக்கலாம் மேசன் வேலைக்கு 1500 ரூபாய் வழங்கினால், இதற்கு 4000 ரூபாய் வழங்குகின்றனர்.

ஆனால் தற்போதுள்ள பிரச்சனை என்னவென்றால் மண் அனைத்தையும் எடுத்ததன் பின்னர் இரண்டு வருடங்கு பிறகு ஒருவருக்கும் ஒருவேலையும் இருக்காது. குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது. பயணிப்பதற்கு வீதியும் இருக்காது. விவசாயம் செய்ய நிலமும் இருக்காது.

மண் அகழ்விற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்வதனால் வேலை வாய்ப்பு இல்லாமல் போகும். ஆனாலும் மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.

நீங்கள் நிறுத்தாவிட்டாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்தே சட்ட விரோத மண் அகழ்விற்கு இணைத்தலைவர் வியாழேந்திரன் தடை விதிக்கும் தீர்மானத்தினை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *