நெகிழ்ச்சிப் போக்கில் மகிந்த ராஜபக்ச ஆனால் கோட்டாபய அவ்வாறு இல்லை – விமல் வீரவன்ச

நெகிழ்ச்சிப் போக்கில் மகிந்த ராஜபக்ச ஆனால் கோட்டாபய அவ்வாறு இல்லை – விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அராசாங்கதிற்குள் அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்படுத்திய முரண்பாடுகள் தொடர்பாக பௌத்த குருமார் மற்றும் மகாநாயக்க தேரர்கள் தீவிரமாக ஆலோசித்து வருதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை மீது கடும் அழுத்தம் பிரயோகிப்பது தொடர்பாகவே விமல் வீரவன்ச எதிர்ப்பை வெளியிடுவதாகுவும் அதனாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை அபிவிருத்தியை இந்தியாவிடம் கையளிப்பது தொடர்பான நெகிழ்ச்சிப் போக்கில் செயற்படுகின்றார் என்றும் ஆனால் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு இல்லை என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 

இதனால் கோட்டாபயவை கட்சித் தலைவர் ஆக்குவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து செல்வாக்கையும் பிரயோகித்து இலங்கை மீதான வல்லரசு நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியும் என விமல் வீரவன்ச நம்புவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பௌத்த மகாநாயக்க தேர்களோடு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உரையாடி வருகின்றது. மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான போக்கை விமல் வீரவன்ச கொண்டிருக்கவில்லையென்றும், அமெரிக்க இந்திய நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளவதற்கு பொருத்தமானவர்கள் கோட்டாபய ராஜபக்சவே என்ற நிவைப்பாடு பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் தலைவராக பதவி வகிப்பதன் மூலமே சகல வல்லமை கொண்ட நிறைவேற்று அதிகாரியாக செயற்பட முடியும் என்ற கருத்து அங்கத்துவ கட்சியிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில் அரசியல் ரீதியாக இதுவரையும் தோற்கடிக்கப்படவில்லை என்பதால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்சவை பயன்படுத்துவதன் மூலமே சர்வதேச அரங்கில் ஈழத் தமிழரின் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்ய முடியும் என்ற கருத்தையும் விமல் வீரவன்ச கூறி வருகின்றார்.

இந்த விடயங்கள் தொடர்பாக மஹிந்த சாதகமான போக்கை கொண்டிருந்தாலும் கட்சித் தலைமைப் பதவியை கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்குவதன் மூலமே இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையும் விமல் வீரவன்சவிடம் இருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் விமல் வீரவன்சவின் நோக்கம் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் சந்தேகடைந்திருப்பதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது. அதாவது, மஹிந்தவையம் அவருடைய அரசியல் பலத்தையும் நீக்கம் செய்வதே நோக்கம் எனவும் மூத்த உறுப்பினர்கள் கருதுவதாகவும் கூறப்படுகின்றது. 

இருந்தாலும் கோட்டாபய ராஜபக்சவை கட்சித் தலைவராக்க வேண்டுமென்ற விமல் வீரவன்சவின் நிலைப்பாடு தொடர்பாக பௌத்த குருமாரும் மகாநாயக்க தேரர்களும் அதிக கவனம் கொண்டிருப்பதகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *