தமிழகத்தில் தனது எம்.பி தொகுதியான தூத்துக்குடிக்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமிற்கு கனிமொழி சென்று அங்குள்ளவர்களை சந்தித்து உதவிகளை வழங்கினார்.
குறித்த பகுதியிலுள்ள தாப்பாத்தி இலங்கை முகாமிற்கு இதுவரையில் பல ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்றதில்லை.
இந்த நிலையில், நேற்று திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி., நேரடியாக முகாமிற்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்திருக்கிறார்.
கனிமொழி எம்.பி. வருவதை கண்டதும் அங்குள்ள மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் இல்லங்களுக்கு நீங்கள் வர வேண்டும் என்று இலங்கை தமிழ் பெண்கள் அன்புடன் கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து, முகாமில் உள்ள ஒவ்வொரு தெருவாகவும், ஒவ்வொருவரின் இல்லமாக சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது தங்களுக்குக் கழிவறை வசதிகள் மிகக்குறைவாக இருக்கிறது; அதை அதிகப்படுத்தித்தர வேண்டும், மின்சார வயர்கள் தாழ்வாகச் செல்வதால் அதை ஒழுங்குப்படுத்த வேண்டும், குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பலருக்கும் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அதை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்தனர்.
இவையனைத்தும் விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த கனிமொழி, அங்குள்ள கழிவறை வசதிகளை நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, அப்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடை மற்றும் அப்பகுதியில் உள்ள பள்ளியைப் பார்வையிட்ட பின்னர் முகாமில் உள்ள 505 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்.