நெருக்கடியான சூழ்நிலையில் செயற்படும் விதம் குறித்து பிரதமர் நன்கு அறிவார். எனவே பிரதமரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அபயராம விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,சுகாதார அமைச்சு பலவீனமடைந்துள்ளது என்பதை பல காரணிகள் உறுதிப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தை பலவீனப்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது.
ஆனால் அரச தலைவர்களினதும், அரசாங்கத்தினதும் குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு. கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது என்றார்.