நோன்பு காலங்களில் வழங்கப்படும் ‘கஞ்சி’ இம்முறை வழங்கப்படக் கூடாது உட்பட முஸ்லிம் பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய 30 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய சுற்று நிரூபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமை பள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மாத்திரமே வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பள்ளிவாசல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அளவுக்கதிகமானோர் கூடுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வழிபாடுகளின் போது நிச்சயம் தனிநபர் இடைவெளி பேணப்பட வேண்டும். சமூக இடைவெளியைக் கருத்திற் கொண்டு 100 பேரைவிடக் குறைவானோரே அனுமதிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நோன்பு காலங்களில் வழங்கப்படும் ‘கஞ்சி’ இம்முறை வழங்கப்படக் கூடாது. அத்தோடு பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்பளுக்கு அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு , ஊழியர்களும் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.