பதுங்குகுழி நீ உறங்குமிடம்…
தலை நிமிரமுடியாமல் எதிரி ஏவிய எறிகணைகளால் காடு அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. ஒன்று வெடித்த நொடிப் பொழுதுக்குள் அடுத்தது, அடுத்தது என இடைவிடாதபடி சில ஒரே இடத்திலும் சில தூரப்போயும் வெடித்துச் சிதறின. பச்சைமரங்கள் வெம்மையுடன் அவிந்து கருகிய மணம் அப்பிரதேசமெங்கும் நிறைந்தது. பசுமையாகப் படர்;ந்திருந்த புற்கள் கருகியும், கருகிய புற்களின் மேல் சுழலாய் எழுந்த புகை மண்டலத்தின் கரிபடர்ந்தும் அவ்விடம் சுடுகாடுபோலக் கிடந்தது. முறிந்த மரங்கள் ஒரு புறம். எறிகணைத் துண்டுகளாற் குத்திக் கிழிக்கப்பட்ட பச்சை மரங்கள் இன்னொரு புறமாக அவ்விடம் கொடூரக் காட்சி ஒன்றின் உச்சநிலைக்குச் சாட்சியாய் விளங்கியது.
மண் மூட்டைகள் கொண்டு மூடப்பட்ட பதுங்கு குழிகளின் மேல் அதன் அருகில் வெடித்த எறிகணைகள் மண்வாரிக் கொட்டியிருந்தன. சில நாட்களுக்கு முன் அவ்விடத்தில் பெரியதொரு சண்டை நடந்ததற்கான அடையாளங்களாக வெற்று ரவைக்கோதுகளும், எறிகணைகள் வீழ்ந்து குழி தோண்டிய பள்ளங்களும், இரத்தக்கறை படிந்து காய்ந்துபோன சுவடுகளும் அவ்விடத்தின் அசாதாரணமான பயங்கர நிலையினைக் காட்டியது. தாறுமாறாய் முறிந்து சரிந்தபடி கிடக்கும் பச்சை மரங்களைப் பார்க்கும் போது ஆரபிக்கு மிகுந்த கவலையாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வளங்கள், வயல்கள், பூத்துக் குலுங்கி காய் பிஞ்சாய் இருக்கின்ற தோட்டங்கள் என்பனவற்றையெல்லாம் எதிரி சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்ற அவலத்தைக் காணும்போது ஆரபிக்கு மனதைப் பிசைந்தது.
வன்னி மண்ணின் ஆழ வேரோடிய காட்டுமரங்கள் பாதை நீளமும் குடைபிடிக்கும். அதற்குள்ளால் எப்பக்கமும் எதிரி ஊடுருவுவான் என்று கண்கொத்துப் பாம்பாய் காவலிருந்து இரவின் நீண்ட பொழுதுகளில் அவர்கள் விழிகள் சிவந்து கொள்ளும். பொழுது மங்கும் போது ஓயாமல் சிணுங்கும் நுளம்புகளை விரட்டினாலும், சுற்றிச் சுற்றி வந்து மாயவித்தை காட்டி ஊசியாகக் குத்தும் அவைகளிடமிருந்து தப்பிச் சொற்ப நேரம் நித்திரைக்காகப் போராடி, அரைகுறைத் தூக்கத்தில் விழித்து, தலைமாட்டில் வைத்திருந்த துப்பாக்கியைத் தடவிச் சரிபார்த்து…. அந்தக் கணங்களிலெல்லாம் அவர்களின், ‘அவள்’ அவர்களுடன் இருந்தாள்.
பதுங்குகுழிக்குள் மழை வெள்ளம் நிரம்பியிருந்தது. ‘க்ளக், க்ளக்’ என்றவாறு தவளைகளும் பேத்தைகளும் இன்னும் பெயர் தெரியாத பூச்சிகளும் மிதந்து சிக்குண்டு வந்து முழுங்காலுக்கு மேலாக வெள்ளம் நிறைந்தபோதும், அந்த நாட்களில் ‘அவள்’ அவர்களுடன் தான் இருந்தாள். எல்லோருக்கும் விருப்பமுடைய ஒருத்தியாக இருந்தாள்.
“கலவாய்க்குருவி” என்ற அவர்கள் அவளுக்குப் பொருத்தமாகவே பெயரையும் வைத்திருந்தனர். எந்தநேரமும் ஓயாமல் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாள். அமைதியாக, எதுவித ஆரவாரங்களும் காட்டாது இருக்கவேண்டிய நேரங்களில் அவள் தனது சிரிப்பினையும், கதைக்கவேண்டிய உதடுகள் வரை வருகின்ற வார்த்தைகளையும் அடக்குவதற்குப் படுகின்ற பாட்டை நினைக்க அவர்களுக்கு அடங்காத சிரிப்பு வரும். கைகளால் வாயைப் பொத்திச் சிரிப்பை அடக்கி, மூச்சுமுட்டி நிற்கையில் சிரிப்பில் கண்களில் நீர் முட்டும்.
வியர்வை வழியப் பதுங்குகுழி வெட்டி மண்மூட்டை அடுக்கி ஓயாத வேலையிலும் வருகின்ற களைப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். காணுகின்ற, பேசுகின்ற நேரமெல்லாம் அவள் ஓயாமல் சிரித்தபடி மற்றவர்களையும் சிரிக்க வைத்தாள். அவளுக்குள் எப்படித்தான் சிரிக்க வைக்கக்கூடிய கதைகள் குறையாமல் ஏராளமாக இருந்தனவோ?
அந்தக் கணங்களிலெல்லாம் ஓயாமல் ஒவ்வொரு நாட்களும் எறிகணைகள வந்து வீழ்;ந்தன. எதிரி முன்னேறுவதும் பின்வாங்குவதும் அவர்கள் முற்றுகையிட்டுத் தாக்குவதுமாக சண்டைகள் நடைபெற்றன. அவள் இருக்கும் போது எதுவுமே கடினமாகத் தெரிவதில்லை. எங்கேயோ எல்லாம் திரிந்து, எதிரிக்கு அண்மையாகவுள்ள இடங்களுக்கெல்லாம் சென்று மணம் பிடித்து, மாங்காய் பிடுங்கி வருவாள், இன்னொருநாள் மரவள்ளிக் கிழங்கு கிண்டி வேர்களில் முற்றிய கிழங்குகள் தொங்க குலைபோலக் கொண்டு வந்து போட்டு வெட்டி அவிப்பாள். எல்லோரும் அடித்துப் பறித்து உண்டு மகிழ்ந்த அந்த நிமிடங்களிலெல்லாம் எதிரி ஏவிய எறிகணைகள் இடைக்கிடை வந்து விழுந்தன. மரவள்ளித் தோட்டங்களும், கத்திரிப் பாத்திகளும் கருகிப்போயின. யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதை திறப்புக்கான போர்க்களம் கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலுமே ஜெயசிக்குறு பற்றிய விமர்சனங்களை உண்டு பண்ணியிருந்தது.
அது இரண்டாம்கட்ட இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள், அவர்களெல்லோரும் ஆயத்தமாகவே இருந்தார்கள். அமாவாசை நாட்களும், நிலவு நாட்களும் தேய்பிறை வளர்பிறை நாட்களும் மாறி மாறி வந்தன. அது ஒரு முன்நிலவு நாளாகத்தான் இருக்க வேண்டும். குடை பிடிக்கும் மரங்களின் கீழே இலைப் பொட்டுக்களாக நிலவுக் கதிர்கள் ஊடுருவின. காட்டில் எறித்த நிலவு அழகாக இருந்தது. ஆங்காங்கே நீர் தேங்கிய குட்டைகளிலும் நீர் நிரம்பிய பதுங்குகுழிகளிலும் நிலவின் விம்பம் சலனப்பட்டுத் தெரிந்தது.
அவர்களின் கலவாய்க்குருவி காவற்கடமை முடித்துவிட்டு வந்துவிட்டாள்.
“இனிப் பாட்டும் கூத்தும்தான்”. தோழி ஒருத்தி கூறினாள்.
காவற்கடமை நேரங்களில் எப்படித் தான் வாயை அடக்கி வைத்திருந்தாளோ? அது அவளுக்குத்தான் வெளிச்சம்.
நிலவு இரவின் அமைதியைக் கலைத்தது. அவள் பாடல் மெல்லக் கலகலப்பை ஊட்டியது. போராட்டப் பாடல்களுள் அவளுக்குத் துள்ளல் இசையில் அமைந்த பாடல்கள் தான் பிடிக்கும். அவை அவளது வாயில் சுலபமாக நுழைந்து கையின் தாளத்துக்கமைய ஒலிக்கும். இடையிடையே ஒலிபெருக்கியில் ஒலிபரப்பாளர் ஒலிபரப்புவதுபோல் தானே ஒலிபரப்புச் செய்து, வாயினால் வாத்திய இசைபோட்டு அவர்களைச் சிரிக்கவைத்த நாட்களும், அந்த நாட்களிலும் முன்நிலவின் குளிர்ந்த ஒளிக்கதிர்கள் பொட்டுப் பொட்டாய் தரையைத் தொட்டன.
அது நெருப்பள்ளித் தின்ற களமாக இருந்தது. அந்தப் பின்னிரவில் எதிரிவிட்ட தேடொளி ஒளிப்பந்தாக உயரத்தோன்றி கீழே வந்து அந்தக் கரிய இரவையும் பகலாக்கியது. கருமை நிழலாகக் குவிந்திருந்த காடுகள் ஒளிபெற்று மீண்டும் பழைய நிலைக்கு வந்தன. காட்டில் வெளியே உலாவிய விலங்குகள் பற்றைகளுக்குள் ஓடி ஒளிந்தன. அவற்றினது கண்கள் வெளிச்சம்பட்டு நெருப்புக் கோளங்களாக மினுமினுத்தன.
அதனைத் தொடர்ந்து அவ்விடம் எறிகணையால் அதிர்ந்தது. மண்துகள்கள் அள்ளுண்டு சிதறின. எறிகணைகள் அடுக்கடுக்காய் வீழ்ந்து குழிகளைத் தோண்டின. அடுத்த நாள் அசாதாரண நிலமையாகத் தான் இருக்கப் போகிறதோ!
அவைகள் எச்சரிக்கை ஒலிகளாகப்பட்டன.
“நாளைக்கு அவன் முன்னேறக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கு. எல்லோரும் கவனமாய்த் தயாராய் இருங்கோ”.
கட்டளைகள் வந்தன.
நிலம் விடிகையிலேயே வேவு விமானம் சுற்றத் தொடங்கியது.
“முன்னுக்கு முழுவியளம் மாதிரி உது வந்திட்டுது. எங்கட பிளான் எல்லாம் பிழைச்சுப்போட்டுது”.
கலவாய்க் குருவி புறுபுறுத்தாள். சில நாட்களுக்குப் பின்னர் நிலமை நன்றாக இருந்தமையால் நேற்றுப் பின்னேரம் பின்னுக்குச் சென்று அவளும் இன்னும் சிலரும் குளித்துவிட்டு வந்திருந்தனர். அவள் அணிந்திருந்த புதிய சீருடை அவளுக்கு அழகாகவே இருந்தது. உடுப்புத் தனக்கு நன்றாக அளவாக இருப்பதாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டாள். உடுப்பைக் கசங்காமல் காப்பதற்குப் பெரும் பிரயத்தனப்பட்டாள். உடுப்பு அழுக்குப் படியாதவாறு பதுங்குகுழிக்குள் அவதானமாகவே சென்றாள். அவர்களுக்கு அவளைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது.
அவளது கலகலப்பும் பகிடிகளும் வழமைபோலவே இருந்தன. ஆனால் வெளியில் சத்தம் போட்டு ஓடித் திரிகின்ற நிலமையில் அப்போதைய சூழ்நிலை இருக்கவில்லை.
வேவு விமானத்தைத் தொடர்ந்து, எந்தப் பக்கமாக வந்து சேர்ந்தது என்று யோசிக்க முன்னரே “கிபிர்” குண்டுகளைப் போடத் தொடங்கியது. எல்லோரும் நிலையெடுத்தவாறு இருந்தனர். பலத்த அதிர்வுடன் புகைமண்டலம் மேலேழுந்து, எந்த இடம், எந்தத் திசை எனத் தெரியாதவாறு இடத்தை மறைத்தது. இது, எதிரி முன்னேறப் போகிறான் என்ற அபாய அறிவிப்பை உணர்த்தியது.
எதிரியின் பீரங்கிகள் இரையத் தொடங்கின. அவை பேரிரைச்சலாக ஊழிக்காற்றின் ஊளையாக நெருங்கின. எல்லோரும் தயார் நிலையில் நின்றனர். ஆயுதங்கள் பேசத் தொடங்கின. அவ்விடம் ஓர்மமும் வேகமுமே முன்னின்றன. தொலைத் தொடர்புக் கருவிகள் இரையத் தொடங்கின. கட்டளைகள் கணத்துக்குக் கணம் வந்து கொண்டிருந்தன.
“ எங்கட குருவி எங்கே? அட அங்க தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருக்குது”
அவளது கனரக ஆயுதம் முழங்கிக் கொண்டிருந்தது. எதிரியின் கனரக ஆயுதங்கள் நெருப்பு மழை பொழிந்தன. ஏட்டிக்குப் போட்டியாய் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. ஒன்றுக்குப் பத்தாக பத்துக்கு நூறாகப் பல்கிப் பெருகின.
ஒருபுறம் கிபீர் விமானங்கள் இலக்கின்றி எழுந்தமானத்துக்கு குண்டுகளைத் தள்ளிச் சென்றன. காடுகளின் நீண்ட இடைவெளிக்கு ஒருவராக, இருவராக நிலையெடுத்து நடந்த சண்டை உக்கிரமானதாக, தலைநிமிர்த்த முடியாததாக இருந்தது.
மோட்டார் எறிகணை ஒன்று அவளது காலைப் பதம்பார்த்துவிட்டது. ஆ! அவர்களின் கலவாய்க் குருவியின் ஒரு கால் சிதைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இரத்தம் ஆறாக ஓடியது. அவளுக்குப் பக்கத்தில் நின்றவள் தொடர்ந்து சண்டை பிடித்துக்கொண்டேயிருந்தாள்.
சற்று தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தபோது, சடார் என்று வந்து வீழ்ந்த எறிணை ஒன்றினால் தோழி வீழ்ந்தாள். எரிகுண்டு பட்டதோ…? ஒரு கைப்பிரதேசம் கருகி அப்படியே அவ்விடத்திலேயே கிடந்தாள்.
உந்த நிலையிலும் அவ்விடத்துக் காட்டுப் பாதை வழியாக இராணுவம் வரலாம். ஒருபக்கம் அவளுக்குக் கால் வலித்தது. அது தொங்கிக்கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்தவாறே அவளது தோழி வீழ்ந்து கிடக்கும் இடத்துக்கு வந்தாள். தொங்கிக் கொண்டிருந்ந்த கால் மிகுந்த வேதனையைக் கொடுத்தது.
தனது கோல்சருக்குள் அவள் எப்போதுமே கத்தி வைத்திருப்பாள். மாங்காய் மற்றும் மரக்கறிகள், இளநீர் வெட்டுவதற்குப் பயன்படுத்தும் அவளது கத்தி அது. இப்போது ஒரு கணம் நிதானித்து மறுகணம் தொங்கிக் கொண்டிருந்த காலைத் துண்டாக வெட்டினாள். ஒழுகிய இரத்தததைக் கட்டுப்படுத்த சாரத்தைக் கிழித்துக் கட்டுப்போட்டாள்.
“எப்படி? என்ர கால் வெள்ளையாய் இருக்குது” என்று தோழிக்குக் காட்ட, தோழி “கறுப்புக் காலில் குதிமட்டும் ஜொலிக்குது” என்று கேலிபண்ண. அவளது காலிலே மண் பூச தான் ஓடிக்கலைத்தது ஒரு கணம் குருவியின் மனக்கண்முன் வந்து மறைந்தது.
மறுபடி ஊர்ந்தபடி கிட்டவந்து தோழியின் உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ஒரு கையால் அவளை இழுத்தபடியும் மறுகையில் துப்பாக்கியுடனும் ஊரத்தொடங்கினாள். தோழியின் உடல் மிகுந்த கனமாய் இருந்தது அவளுக்கு நிழல் பிடிக்கும் காடுகள் ஊடே முட்கள் சிராய்த்தன. இன்னும் நிறையத் தூரம் போகவேண்டும். கால்கள் வலித்தன. பசியால் எழுந்த களைப்பு இன்னொருபுறமாக வாட்டியது. அடியடியாக ஊர்ந்துகொண்டே இருந்தாள். ஊர்ந்து ஊர்ந்து போய் அவர்களின் எல்லையில் தோழியின் உடலைச் சேர்ந்தபின், குருவியின் முகத்தில் தோன்றிய சிரிப்பும் வெற்றிப் பெருமிதமும் மூன்று நாட்கள் வரை அப்படியே இருந்தன. அவளது இறுதிக் கணப்பொழுதுகளிலும் அதுவே நிரந்தரமாக…. அழியாத சிரிப்பாக….
இப்போது அந்த இடம் நெருப்பெரிந்த நிலமாக, நினைவகலாத இடமாக இருந்தது. இந்த வெற்று ரவைக்கோதுகள் குருவியினது துப்பாக்கி, எதிரிக்கு எதிராக நின்றபோது துப்பியவையாக இருக்கவேண்டும் என்று ஆரபி நினைத்தாள். அப்பகுதியின் பதுங்குகுழி மழை வெள்ளத்தில் நிறைந்திருந்தது. சேறும் அதற்குள் நின்று கத்தும் தவளைகளும் அந்த இடத்துக்கே நிரந்தரமானவை.
ஆரபியின் கைகள் அந்தப் பதுங்குகுழி மண்ணை ஆசையோடு துழாவின. சில கடதாசித் துண்டுகள் பிய்ந்து வந்தன. என்ன இது?
பிசுபிசுத்தபடி ஒரு பாண் துண்டு. இரண்டு மூன்றாய் பிய்ந்து நனைந்தவாறிருந்தது. அது அவர்களுக்கு இறுதியாக வந்த உணவாகத்தான் இருக்கவேண்டும். கடைசி நாள் கறிப்பாண் வந்ததாக ஆரபிக்கு ஞாபகம். அதேதான். குருவி அரைகுறையில் சாப்பிட்ட நிலையில் சண்டை பிடித்திருப்பாள். அல்லது எல்லாம் முடிந்து ஓய்ந்த பின்னர் வந்து சாப்பிடலாம் என்று வைத்திருப்பாளோ?
இப்போது மழைத்துளிகள் பெரிதாக விழத்தொடங்கின. மழை நீர் கரைந்து, மேலும் மேலும் சிவப்பாகி, பதுங்கு குழியின் நீர் மட்டம் உயர்ந்தது. தவளைகளும் தேரைகளும் ‘க்ளக் க்ளக்’ என்றபடி துள்ளித் திரிந்து விழுந்தன. அது அவர்களின் கலவாய்க் குருவியின் சிரிப்பொலிபோல ஆரபிக்குத் தோன்றியது. காட்டுமரங்களின் இலைகள், மெல்ல மெல்ல விழும் மழை நீர் பட்டுச் சிலிர்த்தன.
நன்றி: களத்தில் இதழ் (22.04.1998).