பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய  சொல்ல எவருக்கும் அதிகாரம் கிடையாது -சரத் வீரசேகர

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய சொல்ல எவருக்கும் அதிகாரம் கிடையாது -சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் தீர்மானிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டுமென வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்களாலும் சர்வதேச அளவிலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏதேச்சை அதிகார கைதுகள் இடம்பெறுவதுடன், சிறுபான்மையினரை அடக்குவதற்கும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்யும் நிலைமை ஏற்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலுள்ளதாகவும், அதை நீக்குவதா அல்லது இல்லையா என்பதை இலங்கை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் எதுவும் மேற்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்ற காரணத்தினாலேயே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும் அதற்குத் துணை போனவர்களையும் கைது செய்ய முடிவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்துவது மனிதாபிமானமற்ற ஒரு செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்புகள், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை கேள்விக்கு உள்ளாக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக 628 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 15 வாக்குகள் பதிவாகியிருந்தன. 40 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

sarஇலங்கையில் இடம்பெற்ற மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் மற்றும் நாட்டில் காணப்படும் ஆபத்தான போக்குகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *