பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் அடைக்கலம் தரக் கூடாது’ என, தலிபான் அரசிடம் இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா – இந்தியா ஒருங்கிணைந்த சர்வதேச ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாஷிங்டனில் பேச்சு நடத்தினர். இரு நாட்கள் நடந்த இந்த கூட்டத்தை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஆப்கனில் ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., லஷ்கர், ஜெய்ஷ் – இ – முகமது, அல் – குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தஞ்சம் அளிக்கக் கூடாது.ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தலிபான் அரசு அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்காவும், இந்தியாவும் பயங்கரவாத தடுப்பு விபரங்களை தொடர்ந்து பரிமாறிக் கொள்வது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்திய மக்கள் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும். ஆப்கன் நிலவரம் மற்றும் அந்நாட்டில் இருந்து எழும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய இந்தியா – அமெரிக்கா இடையிலான ஆலோசனை தொடரும். சட்ட விரோத பணப் பரிமாற்றம், ஆயுதங்கள் மற்றும் போதை மருந்து கடத்தல் ஆகியவற்றை தடுப்பது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் கூட்டத்தில் விவாதித்தனர். சட்ட ஆலோசனைகள் மற்றும் குற்றவாளிகளை நாடு கடத்துவது ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.