சேலத்தில், காவல்நிலையம் அருகே, பழிக்குப்பழியாக ரவுடியை துரத்தி துரத்தி வெட்டிக்கொன்ற சம்பவம் தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (28). கடந்த ஆகஸ்ட் மாதம் 7- ஆம் தேதி கோபிநாத், அவருடைய நண்பர் தேவகுமார் (24) மற்றும் கூட்டாளிகள் உள்ளிட்ட சிலர், அதே பகுதியைச் சேர்ந்த எடிசன் (23) என்பவரை கீழக்கரையில் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிநாத், தேவகுமார் ஆகியோரை கைது செய்துதனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நவ. 5- ஆம் தேதி அவர்கள் இருவரும் நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். கோபிநாத்தும், தேவகுமாரும் சேலம் சூரமங்கம் காவல்நிலையத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அவர்கள் இருவரும் சூரமங்கலம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
நவ. 24- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு கோபிநாத்தும், தேவகுமாரும் சூரமங்கலம் காவல்நிலையத்தில் சென்று கையெழுத்து போட்டுவிட்டு, அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் மூன்று பேர், கத்தி, வீச்சரிவாளுடன் தூக்கிக்கொண்டு அவர்கள் இருவரையும் கொல்ல ஓடிவந்தனர். இதைப்பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.
இந்த துரத்தலில் கோபிநாத்தை மர்ம நபர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார். அவர்கள் சரமாரியாக வெட்டியதில் கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் கூட்டம் கூடியதைப் பார்த்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. கண் முன்னாலேயே தன் கூட்டாளி கொல்லப்பட்டதைப் பார்த்த தேவகுமார், சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தப்பிச்சென்று நடந்த விவரங்களைக் கூறினார்.
இதையடுத்து, காவல்துறை துணை ஆணையர் சந்திரசேகரன், உதவி ஆணையர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம் கைப்பற்றப்பட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தப்பிய கும்பலை பிடிக்க ஒட்டுமொத்த மாநகர காவல்துறையினரும் முடுக்கி விடப்பட்டனர். பள்ளப்பட்டி காவல்துறையினர், புதிய பேருந்து நிலையத்தில் கொலையாளிகள் ஏதும் பேருந்தில் ஏறி தப்பிச் செல்கிறார்களா என கண்காணித்தனர்.
ஒரு பேருந்தில் மூன்று பேர், உடைகளில் ரத்த கறையுடன் இருந்ததை பார்த்த காவல்துறையினர், அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அந்தோணி, கார்த்திக், விக்னேஷ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. எடிசனை கொலை செய்த கோபிநாத், தேவகுமாரை பழிக்குப்பழியாக சேலத்தில் வைத்து தீர்த்துக் கட்டிவிட்டு பேருந்தில் ஏறி தப்பிச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
எப்போதும் மக்கள் நடமாட்டம் பரபரப்பாக இருக்கும் சூரமங்கலம் சாலையில், காவல்நிலையம் அருகிலேயே ரவுடியை துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.