பாகிஸ்தானில் கொரானா வைரஸ் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு பரிதவித்து வருகிறது. இதனிடையே அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றவில்லை என்றால் வைரஸ் பாதிப்பு இன்னும் மோசமாகும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய ராணுவத்தின் உதவியை நாட போவதாக பிரதமர் இம்ரான்கான் அண்மையில் தெரிவித்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள 16 நகரங்களில் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட உள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பாபர் இப்திகர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் ‘‘வரும் நாட்களில் ராணுவ வீரர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவது உறுதி செய்வார்கள்’’ என கூறினார். நேற்றைய நிலவரப்படி பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 939 ஆகவும், கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 329 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது