பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 20-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு பூரண குணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இம்ரான்கானுக்கு மிகவும் நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் ஜாவத் இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் “பிரதமர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார். அவர் படிப்படியாக தனது பணியை தொடங்கியுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு டாக்டரின் அறிவுறுத்தலின் படி அவர் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இம்ரான்கான் குணமடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அவரது மனைவி புஷ்ரா பிபி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.முன்னதாக நேற்று முன்தினம் அந்த நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி மற்றும் ராணுவ மந்திரி பெர்வைஸ் கட்டாக் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.