தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து எமது அரசாங்கம் மனித உரிமை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், நெடுஞ்சாலை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நமது நாட்டிற்கு எதிராக மனித உரிமை தொடர்பான பிரச்சனையொன்று இருக்கும் சமயத்தில் லொஹான் ரத்வத்தையின் இந்தச் செயற்பாடு எப்படி எமது நாட்டை பாதிக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
“மனித உரிமைகள் பிரச்சினைகள் இன்று நேற்று வந்ததல்ல. இந்த நாட்டில் அது எப்போதும் இருந்து வரும் விடயம்.
பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து இந்த மனித உரிமை பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் முகங்கொடுத்து வருகிறது – அது ஒன்றும் புதிதல்ல.இப்போது லொஹான் ரத்வத்தையின் இந்த விவகாரமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நாங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வோம்” என்றார்.