பிரான்சின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா வைரஸ் தொற்றினால் சாவடைந்தார்!

பிரான்சின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா வைரஸ் தொற்றினால் சாவடைந்தார்!

பிரான்ஸின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா (Valéry Giscard d’Estaing) தனது 94 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். அண்மையில் மாறி மாறி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

பெப்ரவரி 2,1926 இல் ஜேர்மனியில் பிறந்தவர் வலெரி ஜெஸ்கா. பின்னர் பிரான்ஸின் Auvergne பிராந்திய அரசியல் ஊடாக நாட்டின் தேசிய அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தார். மைய வலதுசாரி அரசியல்வாதியான அவர் முன்னாள் அதிபர் சார்ள் து ஹோலின் ஆட்சியிலும் அதன் பின்னரும் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்தவர்.

ஐரோப்பிய ஒன்றியம், ஜி-8 போன்ற அமைப்புகளின் ஆரம்பகால சிந்தனையாளரான வலெரி, கடந்த 2017 இல் மக்ரோன் நாட்டின் அதிபராகத் தெரிவாகுவதற்கு முன்னர் பிரான்ஸின் வயதில் குறைந்த அதிபர் என்ற பெருமை பெற்றிருந்தவர்.

1974 இல் அவர் எலிஸே மாளிகை அதிகாரத்துக்கு வந்தபோது அவருக்கு வயது 48. அதன் பின் 1981 வரை ஒரு தவணைக் காலம் பதவியில் இருந்த அவர், நாட்டை மிக வேகமான பொருளாதார, சமூக முன்னேற்றங்களை நோக்கித் திருப்பிவிட்டவர் என்று மதிக்கப்படுகிறார்.ஆனாலும் “புக்காசா வைரம்” (Bokassa diamond) என அழைக்கப்படும் ஆபிரிக்க வைரக்கல் அன்பளிப்பு விவகாரம் ஒன்றில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கு அதிபராகத் தெரிவாகும் வாய்ப்பை இழக்க நேரிட்டது.

வலெரியின் மறைவு குறித்து அதிபர் மக்ரோன் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியில், அவரை “தேசத்தின் பெரும் தொண்டர்” என்று வர்ணித்திருக்கிறார்.

“சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமான ஓர் அரசியல்வாதி அவர். அவரது பாதைகள் இன்றைக்கும் நமக்கு வழிகாட்டுகின்றன. அவரது இழப்பு தேசத்துக்கு ஒரு பெரும் துயரம்” – என்று மக்ரோன் குறிப்பிட்டிருக்கிறார்.

வலெரி ஜெஸ்காவின் இறுதிச் சடங்குகள் தற்போதைய சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது இல்லத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *