பிரான்சில் இன்று இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் தற்போதைய அரச தலைவரான இமானுவேல் மக்ரன் மீண்டும் இரண்டாம் தடவை ஆட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஒப்பீட்டு ரீதியில் வாக்களிப்பு வீழ்ச்சியுடன் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்களிப்பு உள்ளுர் நேரப்படி இரவு 8 மணிக்கு முடிவடைந்து வாக்குச்சாவடிகள் மூடப்பட்டிருந்தன.
இதன் பின்னர் உடனடியாகவே வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் மக்ரன் மீண்டும் 5 வருடங்களுக்குரிய அரச தலைவராக தெரிவு செய்யப்படும் வகையில் 58 சத வீத வாக்குகளை பெற்றுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிப்பட்டுள்ளன.
இதனையடுத்து மக்ரனின் ஆதரவாளர்கள் பரிஸ் நகரின் ஈபில் கோபுரத்துக்கு அருகில் உள்ள சாம்ஸ் து மார்ஸ் பகுதியில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக திரண்டுள்ளனர்.