பிரித்தானியாவில் புதியவகை கொரோனாத் தொற்று பரவி வருகிறது. இப் புதிய வகை வைரஸானது பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவுடனான வீதிப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரித்தானியாவுடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லொறிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் இரு நாட்டு எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சரக்கு லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் நிலவியது.
இதையடுத்து, பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் இடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறித்த பேச்சுவார்த்தையில்இ பிரித்தானியாவிலிருந்து சரக்கு லொறிகளை பிரான்ஸ் எல்லைக்குள் நுழைய ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் சம்மதம் தெரிவித்தார்.
ஆனாலும், எல்லையிலேயே லொறி சாரதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பின்னரே சரக்கு லொறிகள் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
கிறிஸ்மஸ் விழாவை குடும்பத்துடன் கொண்ட சொந்த ஊருக்கு திட்டமிட்டிருந்த சரக்கு லொறி சாரதிகள் பலரும் இரு நாட்டு எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இன்னும் ஆயிரக்கணக்கான லொறிகள் பிரித்தானியா -பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர்.
இதனால், மிகவும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. சிலர் கிறிஸ்மஸ் முடிவடந்த பின்னர் தான் தாங்கள் எல்லையில் இருந்தே வெளியேற முடியும் எனவும் குடும்பதினருடன் கிறிஸ்மஸ் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.