பிரித்தானியாவில் மேலும் ஐந்து நாட்களுக்கு பெருமழை நீடிக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதையடுத்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெருமழை தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், ஸ்கொட்லாந்த் எல்லைப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன மற்றும் டம்ஃப்ரைஸ் அருகே இரண்டு சாலைப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சாலைகள், ரயில் இணைப்புகள் முடங்கியுள்ளதால் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, புதன்கிழமை அதிகாலை 1 மணி முதல் வியாழன் மாலை 6 மணி வரை கும்ப்ரியாவில் உள்ள ஹானிஸ்டர் பாஸில் 370 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி, இங்கிலாந்தில் தற்போது 65 வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன் ஸ்கொட்லாந்தில் 21 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.