உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோரை வைரஸ் தாக்கிய நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைமையிலான அரசு கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை நிரூபிக்கும் விதமாக கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இப்போது வரை 4 முறை சுகாதாரத்துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த எர்னஸ்டோ அராஜுவோ இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை மோசமாக கையாண்டதால் அந்த நாடுகளிடம் இருந்து போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை பெற முடியாமல் போனது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மந்திரிசபையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென கூட்டணி கட்சிகள் அதிபர் ஜெயீர் போல்சனாரோவுக்கு அழுத்தம் கொடுத்தன. அதன்பேரில் பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக அதிபர் ஜெயீர் போல்சனாரோ மிகப்பெரிய அளவில் தனது மந்திரி சபையை மாற்றியமைத்துள்ளார்.
வெளியுறவு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதி உள்பட முக்கியமான 6 துறைகளுக்கு அவர் புதிய மந்திரிகளை நியமித்துள்ளார்.