ஸ்ரீலங்காவில் அடக்குமுறை ஆட்சியை செய்வதற்காக அவசர காலசட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
சீனி, அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, சஜித் பிரேமதாஸவின் தந்தையான அமரர் ஆர் .பிரேமதாஸ மீதுள்ள ஜனநாயக விரோத குற்றச்சாட்டுக்களையும் பட்டியலிட்டார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடத்தைக் குறிப்பிட்டுள்ளார். மக்களை அடக்குமுறை செய்வதற்காக இந்த சட்டம் அல்ல. ஆனால் எதிர்க்கட்சியினர் கறுப்புச் சந்தையிலுள்ள முதலாளிகளுக்கு விசுவாசமாகவே நடக்கின்றனர்.
ஆனால் மக்கள் பக்கமாக அரசாங்கம் உள்ளது. அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டால் நிச்சயமாக சீனி விலை இன்று 270 ரூபாவாக விற்கப்படும் அபாயம் ஏற்படும். ஆசிரியர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி போராட்டம் செய்தபோதும் பொலிஸாரை ஈடுபடுத்தி அதனை கட்டுப்படுத்தவில்லை.
ஆனால் அவுஸ்திரேலியாவில் மக்கள் போராட்டம் நடத்தியபோது அந்நாட்டுப் பொலிஸாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எமது நாடடு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளை கொவிட் ஒழிப்பு முயற்சிகளுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளும்படி கூறுகின்றனர்.
ஜனநாயகம் பற்றி எதிர்க்கட்சித்தலைவர் மறந்துவிட்டார். ஜனநாயகம் அழிக்கப்பட்டதை அவர் தனது வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டார். ஆர் பிரேமதாஸவின் மனைவியாரது புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் அதனை பிரசுரிக்க அலுவலகம் வரும் வழியில் வீதி விபத்தில் உயிரிழந்தார். எனினும் அது சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட விபத்தாகும். அந்த விபத்துடனேயே குறித்த ஜனாதிபதியின் மனைவியாரது புகைப்படமும் மாயமாகியது.
பிரேமதாஸ யுகத்தின் ஜனநாயகம் இதுதான். நாடாளுமன்றத்தில் பிரேமதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை அன்று கொண்டுவரப்பட்டது. விவாத நாட்களில் நாடாளுமன்ற ஆசனங்களில் பன்றியின் எண்ணெய் விடப்பட்டது. மலையாள ஜோதிட ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உலங்கு வானூர்தியில் வெட்டப்பட்ட தேசிக்காய்கள் நாடு முழுதும் கொட்டப்பட்டன. நாடாளுமன்ற பிரவேசத்தில் மலையாள மாந்திரிகள் வந்து வேதம் ஓதினார்கள்.
இவ்வாறு சஜித்தின் தந்தையாரது ஆட்சிக்காலத்தில் ஜனநாயக விரோத நடவடிக்கை இடம்பெற்றது. கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களை கொண்டுவந்து பதுக்கிவைப்பவர்களுக்காக சார்பாகவே எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்தனர்.
சீனி பதுக்கல் நிறுவனங்களை சோதனை செய்கையில் அவற்றின் உரிமையாளர்களாக முன்னாள் அமைச்சர்களின் புதல்விகள், இடதுசாரி கட்சிகளின் தலலைவர்களே உள்ளனர் எனத் தெரிவித்தார்.