அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ், கிளின்டன், பராக் ஒபாமா ஆகிய மூவரும் நாட்டு மக்கள் பார்க்கும் வண்ணம் கமராக்களின் முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசியைத் தங்களுக்கு ஏற்றிக்கொள்ள முன்வந்துள்ளனர்.
வைரஸ் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தடுப்பு மருந்து குறித்து மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையீனங்களைக் களைவதற்காகவும் அவர்கள் இந்த முயற்சியில் இறங்கவுள்ளனர்.
அவர்களது இந்த முடிவு தொடர்பான தகவல்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
சுமார் 50 வீதமான அமெரிக்கர்கள் மத்தியில் வைரஸ் தடுப்பு மருந்துகள் தொடர்பான நம்பிக்கையீனம் நிலவுவதைக் கருத்துக் கணிப்புகள் வெளிக்காட்டி உள்ள நிலையில் முன்னாள் அதிபர்கள் மூவரும் இந்த விழிப்புணர்வு முன் முயற்சியில் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் புதிய அதிபர் இன்னமும் பதவியேற்கவில்லை. பதவில் உள்ள அதிபர் ட்ரம்ப் தடுப்பூசி போன்ற முயற்சிகளோடு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவந்துள்ளார். இந்த நிலையில் மக்களை விழித்தெழச் செய்வதில் அங்கு ஒருவித தலைமைத்துவ வெற்றிடம் காணப்படுகிறது. அதனை இட்டு நிரப்பும் நோக்கிலேயே முன்னாள் அதிபர்கள் மூவரும் களத்தில் குதிக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் இன்னமும் எந்த ஒரு தடுப்பூசியும் அரச மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பைஸர் (Pfizer) மற்றும் மொடேனா (Moderna) இரண்டு தடுப்பூசிகளும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு அனுமதிப்பதற்காகப் பரிசீலிக்கப்பட வுள்ளன.
உலகெங்கும் வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டு நிறைவடைகின்ற நிலையிலும் அமெரிக்காவில் நாளாந்த தொற்று நிலைவரம் தொடர்ந்து உச்ச அளவுகளைத் தொட்டுக்கொண்டி ருக்கிறது.
புதன்கிழமை வெளியான தரவுகளின்படி ஒரே நாளில் அங்கு வைரஸுடன் தொடர்புடைய 2ஆயிரத்து 777 மரணங்கள் பதிவாகி உள்ளன. அதேநாளில் 2லட்சத்து 5ஆயிரம் புதிய தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.