புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாக நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஒழங்கு செய்யப்பட்ட வருடாந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு சில வார்த்தைகள் பேசுவதற்கு எமக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் முதலாவதாக அச்சம்மேளனத்தின் தலைவர் உட்பட நிர்வாகச்சபையினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகிலுள்ள பல நாடுகளையும் விட இலங்கை, கொவிட் 19 தொற்றினை மிகவும் முறையான விதத்தில் கட்டுபாட்டுக்கள் வைத்திருப்பதனை அதிகளவானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் பொருளாதாரத்தை முறையாக நிர்வகித்து முன்னோக்கி செல்வதற்கு முடியும் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, இதுவரை கொவிட் 19 தொற்றினை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையானது முன்னிலை வகிப்பதுடன், பல துறைகளிலும் பொருளாதார முன்னேற்றத்தினை சாதகமான முறையில் பதிவு செய்வதற்கு எம்மால் முடிந்துள்ளது.
நண்பர்களே, எமது நாடு எதிர்நோக்கியுள்ள முதன்மையான சவாலானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதியின் படி மக்களை மையமாகக்கொண்ட பொருளாதார புத்தெழுச்சியினை ஏற்படுத்துவதாகும்.
இதனிடையில் கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் மதிப்பிடப்பட்ட பொருளாதார வீதம், அம்முயற்சிக்கு பாரிய தடைகள் உள்ளன எனவும் பலரினால் கணிக்கப்பட்ட போதிலும் அவ்வாறன தடைகள் ஏற்படுவதனை குறைத்து பொருளாதார புத்தெழுச்சியினை ஏற்படுத்துவது எமக்குள்ள பாரிய சவாலாகும்.
இக்குறிக்கோள்களை அடைய அரசாங்கம் புதிய உத்திகளை கையாண்டுள்ளது என உங்களுக்கு தெரியும். நாட்டிலுள்ள வர்த்தகர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்காக ‘கடன் விலக்குகளை’ வழங்குமாறு அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினோம்.
நாட்டின் வெளிப்புற கணக்கினை முறையாக நிர்வகிப்பதன் மூலம் ரூபாய் மதிப்பினை பாதுகாத்து அரசாங்கத்தின் கடன் அழுத்தங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம்.
ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கொவிட் -19 தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு நேரடி நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதன் மூலம் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க எம்மால் முடிந்தது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படையாதிருப்பதற்கு வரி மற்றும் வட்டி சலுகைகளை பெற்றுக் கொடுத்தோம். நீர், மின்சாரம், அனுமதி பத்திர கட்டணம் ஆகியவற்றை செலுத்த எம்மால் கால அவகாசம் வழங்கப்பட்டது. குத்தகை தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான சலுகைகள் வழங்கப்பட்டன.
இவ் அனைத்து நடவடிக்கைகளிலும் அரச ஊழியர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் செயல்திறன்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை காரணமாக நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நிர்கதியான நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் இருந்தது. மேலும் சில சந்தர்ப்பங்களில் சிலர் அவ்வாறு நடைபெறும் வரை எதிர்பார்த்திருந்திருப்பார்கள் என்றும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனாலும் இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் இந்த சவால்களை நேரடியாக எதிர்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுததுவதற்கு எமது அரசாங்கத்திற்கு முடிந்தது. இது தொடர்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.
எதிர்வரும் ஆண்டுகள் எமக்கு தீர்மானம் மிக்க ஆண்டுகளாகும். எமது நாட்டின் பொருளாதார ரீதியான முன்னோக்கிய பயணத்தை வலுப்படுத்தும் காலமாகும். எதிர்வரும் இக்காலப்பகுதி வெற்றியளிக்க வேண்டுமாயின், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இச்சவாலை நிர்வகித்துக் கொள்ள வேண்டும். அதற்கு, நாம் புதிய உத்திகளை செயற்படுத்த வேண்டும். இதுவரையான உங்களது வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் அனைவரும் இச்சவாலை ஏற்பதற்கு தயாராகவிருக்கின்றீர்கள் என்பது புலப்படுகிறது.
அரசாங்கம் என்ற ரீதியில், நாமும் அந்த பொறுப்பை ஏற்பதற்கு தயாராகவுள்ளோம். அவ்வாறாயின் எம்முடன் இணைந்து, எமது நாட்டின் பொருளாதாரத்தை மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கு நாம் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.