ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை நிராகரித்துள்ளது.
இலங்கையின் இந்த நிராகரிப்பை தொடர்ந்து இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளான கனடா ஜேர்மனி வடமசெடோனியா மொன்டினீக்ரோ பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளன.
புதியதீர்மானத்தின் உள்ளடக்கங்கள் சமரசபோக்கை வெளிப்படுத்துபவையாக காணப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ள அதேவேளை ஒருமித்த தீர்மானமொன்றை ஏற்றுக்கொள்வது கூட இலங்கைக்கு அரசியல்ரீதியில் சவாலான விடயமாக காணப்படலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தீர்மானமொன்றை இலங்கை ஏற்றுக்கொண்டால் அது இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்ற கருத்தை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தீர்மானமொன்றிற்கு இணைஅனுசரணை வழங்குவது குறித்த கேள்விக்கே இடமில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர் அவ்வாறானதொரு தீர்மானமே அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகஅமைந்தது, அது அரசமைப்பிற்கும் இறைமைக்கும் மக்களிற்கும் எதிராக காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கருத்தொருமைப்பாட்டுடனான தீர்மானம்என்பது கூட சாத்தியமா இல்லையா என்பதை என்னால் தெரிவிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆனால் அரசியல் ரீதியில் இது ஒரு பெரும் சவாலாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறியது குறித்த முடிவில் இலங்கை உறுதியாகவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் 2019 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு, முன்னைய இணை அனுசரணை வழங்கப்பட்ட ஆணை குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.
முன்னைய தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளும் புதிய தீர்மானத்தை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன இலங்கை அரசாங்கம் ஆதரவளித்தாலும் ஆதரவளிக்காவிட்டாலும் அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.