புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானதா? யாரை தாக்கும்?

புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானதா? யாரை தாக்கும்?

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டு ஆன பின்னும் வீரியம் குறையாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.

இதனால் பல நாடுகள் மீண்டும் பொது ஊரடங்கு அறிவித்துள்ளன. தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய வைரஸை விடவும் மிகவும் வீரியமாக பரவி வருவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய இந்த கொரோனா பெருந்தொற்று இங்கிலாந்தில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், தனது அடிப்படையான மரபியல் கூறுகளின் கட்டமைப்பில் இருந்து மாற்றம் பெற்றுள்ளது. பந்துபோன்ற உருவத்துடன் கூடிய கொரோனா வைரஸ் தோற்றத்தில், கொம்புகள் போன்று தனித்தனியாக இருக்கும், ஸ்பைக்சில் தான், அந்த மரபியல் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

மனித உடலில் எப்படி கை-கால் அடங்கிய உடல்பாகமோ, அதுபோன்றாதாகவே, இந்த கொரோனா வைரஸ் தோற்றத்தின் ஸ்பைக்ஸ் வர்ணிக்கப்படுகிறது. இந்த ஸ்பைக்ஸ் ஜீன் தான், கொரோனா வைரஸ், மனித உடலில், படிந்து, ஒட்டிக் கொண்டு, உடல் உறுப்புகளின் செல்கள் மூலம் பரவ மிக முக்கிய பங்காற்றுகிறது.

மரபியல் மாற்றம்

தற்போது புதிய வகை கொரோனா வைரசில், மரபியல் மாற்றம் அடைந்துள்ள ஸ்பைக்ஸ் ஜீன், மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி திறனில் இருந்து மறைந்து கொள்ளும் வகையில், உருமாற்றம் அடைந்திருப்பதாக, இங்கிலாந்து மருத்துவ அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாற்றத்தை தான், ஆங்கிலத்தில் பிறழ்வு (Mutation) என்றும், புதிய பரிணாமம் என்றும் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸ், தனது தோற்றத்தில் முழுமையாக மாறவில்லை என்கிறது மருத்துவ உலகம்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், முந்தைய பெருந்தொற்றை விட 70 சதவிகிதம் அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக திகழ்வதாக, மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளை தாக்கும்

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க, புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரசின் பரவல் மற்றும் தாக்கத்தின் வேகம் அதிகம் உள்ளதாக, இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் கூறினாலும், அதற்கு போதிய தரவுகள் இல்லை என இந்திய வைராலாஜி மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் மறுக்கின்றனர்.

ஆபத்தானதாக கருதப்படும் புதிய கொரோனா தொற்றானது முந்தைய கொரோனா தொற்றை விடவும், குழந்தைகளை மிக விரைவில் தாக்கக் கூடியது என இங்கிலாந்து நிபுணர்கள் தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புதிய கொரோனா தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மருத்துவ நிபுணர்கள், இந்த புதிய தொற்று குழந்தைகளை அதிகமாகவும் வேகமாகவும் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.

முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவது உட்பட ஏற்கனவே உள்ள நோய் தடுப்பு விதிமுறைகளே போதுமானது என்று கூறும், மருத்துவ நிபுணர்கள், இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பு

தற்போது, கண்டறியப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளே, இந்த புதிய வகை கொரோனா வைரசை கட்டுப்படுத்தி, தடுக்கும் என்றும், மருத்துவ நிபணர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரசால், உயிரிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக, மிக குறைவு என்ற மத்திய அரசின் தகவலும், நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் முறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் ,முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலமே இந்த புதிய வகை வைரஸையும் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. வைரஸின் தன்மை மாறுவது இயல்பே. பிரிட்டன் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இது 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் கவனம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *