அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக கூடிய கூட்டத்தால், ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பு – மருதானை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு வெளியே பதற்றமான சூழ்நிலை நிலவியது.தடுப்பூசியை பெற்றுக்கொள்ள சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடியதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வட்ஸ்அப்பில் கிடைத்த தகவல்களுக்கு அமைய, இன்று காலை முதல் பொது மக்கள் வைத்தியசாலைக்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர்.
எவ்வாறெனினும் தெரிவு செய்யப்பட்ட மற்றும் ஊழியர்களுக்கே இன்று தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் தமக்கு தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததோடு, சுகாதார விதிமுறைகளையும் மீறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்கு பொது மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்ற போதிலும், அரசு இதுவரை சரியான பதிலை வழங்கவில்லை.
எவ்வாறெனும், இரண்டாவது டோஸைப் பெறுவதற்காக சுமார் ஆறு இலட்சம் மக்கள் காத்திருக்கின்றனர். இதேவேளை, அண்மைய நாட்களில் சில வைத்தியர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.இதன் விளைவாக பொது சுகாதார சுகாதார பரிசோதகர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றப்போவது இல்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.