நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி நிலை காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களுக்கு எரிபொருள் டொலரில் மாத்திரமே நிரப்பப்படுகிறது. இதேவேளை விமான நிறுவனங்களும் தங்கள் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு பெரும் தொகையான பணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு அனுப்பும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது மற்றும் விமான பயணங்களின் எண்ணிக்கையை கட்டுப்பாடுத்துவது குறித்து வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. இந்த நெருக்கடி ஐந்து மாதங்களாக நீடித்து வருகின்றது. இது தொடர்பில் தீர்வை எட்டுவதற்கு அதிகாரிகளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இதேவேளை, டொலரில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, விமான டிக்கெட் மற்றும் சரக்கு விற்பனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையின் சதவீதமாகும். இந்நிலைமை இலங்கையின் எதிர்கால சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
இலங்கையில் கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளா சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அதிக முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், இலங்கைக்கான விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டால் முதலீடு செய்யப்படும் பணம் வீணாகிவிடும் என சுற்றுலாத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இலங்கைக்கு வாரத்திற்கு 12 விமானங்களை முன்பதிவு செய்து வந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், தற்போது மூன்றாக அதன் எண்ணிக்கை குறைத்துள்ளது. மேலும் சில விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமானங்களை அனுப்புவதை நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், இலங்கையில் சுற்றுலாத்துறையை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் விமான நிறுவனங்களுக்கு செலுத்தும் டொலர்களை எவ்வித இடையூறும், தடையும் இன்றி அதே முறையில் செலுத்த வேண்டும் என்பதே சுற்றுலாத்துறையின் கருத்தாகும்.