பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உயர் நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் பரோல் வழங்கியுள்ளது.
தற்போது பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், நாடெங்கும் கோவிட் இரண்டாவது பரவல் அலை அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் முடக்கத்தை ஏற்படுத்திய பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்படின் பரோல் வழங்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது.
பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. பேரறிவாளன் நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது உடல்நிலை மற்றும் கோவிட் பரவலைக் கருத்திற்கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று (மே 18) முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை அளித்திருந்தார்.அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.