பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கிற்கும், எம்டிஎம்ஏ என்று அழைக்கப்படும் பல்நோக்கு விசாரணைக் குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், பேரறிவாளனின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்,”பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் தங்களுக்கு மறுப்பு ஏதுமில்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறிய பிறகும் பேரறிவாளன் விடுதலையைத் தாமதிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆளுநர் அவமதிப்பதாகவே பொருள்படும்.” என்று கூறியுள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், ஆளுநர் இதுவரை அதன் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.