உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் சம்பந்தமான ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவசரப்பட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அநுரபிரியதர்ஷன யாப்பா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கைளை எடுக்காத பட்சத்தில் அது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாடவும் தயாரென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கொழும்பில் நேற்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி எச்சரித்திருந்தார்.
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள தேவாலயமொன்றில் கருத்து வெளியிட்டிருந்த கர்தினால், ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் பிரதிகளை தாம் அரச தலைவரிடம் கோரியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதுவரை அதன் பிரதிகள் தனக்கு வந்துசேரவில்லை என்பதையும் பேராயர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அநுரபிரியதர்ஷன யாப்பா, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, இந்த விவகாரத்தில் அவசரப்பட்டுவிட்டார் என்று கூறினார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஆணைக்குழு, கடந்த முதலாம் திகதி அதன் இறுதியறிக்கையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்திருந்தது.
குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பித்து விவாதத்திற்கு எதிர்கட்சிகள் கோரிவருகின்றனர். இந்த நிலையில், அறிக்கையை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில், கர்தினால் ஆண்டகை நேற்று ஊடக சந்திப்பை நடத்தி இதுகுறித்துகருத்து வெளியிட்டுள்ள நிலையில் ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரத்தில் அவர் அவசரப்பட்டுவிட்டார் என்று இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவது தொடர்பிலான திகதி, இதுவரை நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.