பொட்டு அம்மானும் – இந்திய படைகளும்! | பாகம் 02

பொட்டு அம்மானும் – இந்திய படைகளும்! | பாகம் 02

மண்ணுக்காக வலிகள் சுமந்த அம்மான்!
இன்றும் உலக வல்லாதிக்க சக்திகளால்.ஆச்சரியத்துடனும், அதேவேளை அதிசயத்தைடனும் பார்க்கும் பெயர் பொட்டு அம்மான். அவர் தமிழீழ மண்ணுக்காக, மக்களுக்காக இந்திய இராணுவத்தின் கால கட்டத்தில் அனுபவித்த துன்பங்களைத்தான் இந்த பதிவில் பார்த்து வருகின்றோம்.

கரவெட்டி, களட்டியில் பொட்டுஅம்மான், காயமடைந்த போராளிகள், தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் போன்றவர்கள் ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருக்கும் செய்தி இந்தியப் படையினர் காதுகளை வந்தடைந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டைக் குறிவைத்து இரண்டு ஹெலிக்காப்டர்கள் பறந்து வந்தன. போர் தொடங்கிய காலத்திலிருந்தே யாழ் குடா முழுவதும் இந்தியப் படை விமானங்களின் நடமாட்டங்கள் அதிகமகவே இருந்து வந்தன. பொருட்களையும், படையினரையும் ஏற்றி இறக்குவதற்கும், வானில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கென்றும் இந்தியப் படை விமானங்கள் யாழ் குடா முழுவதும் ஆரவாரப்பட்டுத் திரிந்தன. விமானங்களின்பறப்புக்கள்தெரிந்தால் உடனே பாதுகாப்பு நிலை எடுப்பதற்கு மக்கள் பல காலமாகவே பழகியிருந்தார்கள்.

பொட்டம்மான் உட்பட மற்றய முக்கிய தளபதிகள் தங்கியிருந்த பிரதேசத்திலும் அடிக்கடி விமானங்கள் பறந்தபடிதான் இருந்தன. ஆனால் குறிப்பிட்ட அந்த தினத்தன்று அப்பகுதியில் பறந்து வந்த உலங்கு வானூர்த்திகள் தமது வழக்கமான பயனப்பாதையை திடீரென்று மாற்றி பொட்டம்மான் தங்கியிருந்த வீட்டை நோக்கி விரைந்து வர ஆரம்பித்தன.

மாலை மங்கத்தொடங்கும் நேரம். சாதாரணமாகவே இப்படியான ஒரு நேரத்தில் உலங்குவானூர்த்திகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. இலக்குகளை துல்லியமாகத் தாக்கமுடியாது என்பதனால். பெரும்பாலும் மாலை நேரங்களில் தாக்குதல்களை ஆரம்பிப்பது கிடையாது. ஆனால் பொட்டு அம்மான் தங்கியிருந்த வீட்டை நோக்கி விரைந்த வானூர்த்திகள் வீட்டை ஓரிருதடவைகள் சுற்றிவந்தன.

பழுத்த அனுபவம் கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிலமையைப் புரிந்து கொண்டார்கள். நிலையெடுத்துக்கொண்டார்கள். கட்டிடங்களின் பின் மறைந்து கொண்டார்கள். காயமடைந்த நிலையில்இருந்த பொட்டு அம்மான் மற்றும் போராளிகளை ஒரு கொங்கிறீட்ட கூரையின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். திடீரென்று ஹெலிக்காப்டர்கள் தாக்க ஆரம்பித்தன. சகட்டுமேனிக்குத் தாக்குதலை நடாத்தின. பொட்டு அம்மான் குழுவினருடன் தங்கியிருந்த அன்டன் பாலசிங்கம் மற்றும் அவருடைய மனைவி போன்றோர் வெளியே வளவின் மத்தியில் இருந்த தண்ணீர் தொட்டியின் சீமெந்து தூணுக்கு பின்னே மறைந்துகொண்டார்கள்.

சுற்றிச் சுற்றிவந்து தாக்குதல் நடாத்திய ஹெலியின் பார்வையில் இருந்து தப்புவதற்கு அவர்களும் தூனில் முதுகை ஒட்டியபடி தூணை சுற்றிச்சுற்றி வந்தார்கள் தாம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் குறைந்தது முப்பது புலிகளாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்று இந்திய விமானப் படையினர் நம்பினார்கள். தளத்தில் இருந்த தமது மேலதிகாரிகளுக்கு அதனை அறிவிக்கவும் செய்தார்கள். திருப்தியுடன் அவர்கள் தமது விமானங்களை தளத்திற்குத் திருப்பினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அன்றைய அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் எந்த ஒரு போராளிக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. வீடுகள் கூரைகள் சேதமாகினவே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.

பொட்டு அம்மான், அன்டன் பாலசிங்கம் மற்றும் காயமடைந்த போராளிகள் தங்கியிருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டு விடயங்கள் போராளிகளுக்கு நன்றாகப் புரிந்தது. ஒன்று, இந்தியப் படையினருக்கு தமது இருப்பிடம் பற்றிய செய்திகள் துல்லியமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. அடுத்தது மறுநாள் தரைவழியான முற்றுகை ஒன்று நிச்சயம் அப்பகுதியில் இடம்பெறும் என்பது. உடனடியாகவே தமது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் தீர்மாணித்தார்கள். அப்பகுதியில் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்திருந்தது அவர்களுக்கு புதிய சிக்கல்கலை ஏற்படுத்தியிருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, ஈ.என்.டி.எல்.எப்., புளொட் உட்பட மற்றய இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தினரும் யாழ்குடா முழுவதும் வசித்து வந்ததால், தகவல் கசிவைத் தடுப்பது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அதேவேளை, மக்களோடு மக்களாகக் கலந்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் அப்பொழுது இருக்கவில்லை. எனவே ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். ஒரே பெரிய குழுவாக இருந்து அனைவருமே அகப்பட்டுக்கொள்வதை விட சிறிய சிறிய குழுக்களாகப் பிரிந்து சென்று தங்கியிருப்பது என்று முடிவுசெய்தார்கள். பொட்டு அம்மான் கரவெட்டியில் இருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள நவிண்டில் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்டன் பாலசிங்கம் குழுவினர் கரவெட்டியிலேயே வேறு ஒரு பகுதியில் தங்கவைக்கப்பட்டார்கள்.

பொட்டு அம்மானின் காயங்கள்; மிகவும் மோசமாக ஆரம்பித்தன. சரியாக சிகிட்சை அளிக்கப்படாமை, தொடர்ச்சியான நகர்வுகள், தேவையான ஓய்வின்மை போன்ற காரணங்களினால் மேலும் மோசமான நிலையை நோக்கி அவரது உடல் நிலை சென்றுகொண்டிருந்தது. அவரது கமர்கட்டு காயத்தால் ஊனம் வடிய ஆரம்பித்தது. வெப்ப அவியலான நிலையில் அவரது காயங்கள் சீழ் பிடிக்க ஆரம்பித்திருந்தன. அவரது வயிற்றுக் காயத்திலும் புதிய சிக்கல். விட்டு விட்டு வலிக்கத் தொடங்கின. காரணத்தைக் கண்டுபிடிக்க மருத்துவ கருவிகள், .மருந்துகள் கைவசம் இல்லை. வலியினால் மிகவும் வேதனைப்பட்டார். தொடர்ந்து முனகியபடியே கஷ்டப்பட்டார். அவரது முனகல் அவர்களது மறைவிடத்தை காட்டிக்கொடுத்துவிடுமோ என்று மற்றப் போராளிகள் அஞ்சினார்கள்.

அவர்கள் வீட்டினுள் மறைந்திருக்கும் விடயம் அயலவர்களுக்கு தெரிந்து அவர்கள் மூலமாக இந்தியப் படையினரின் காதுகளைச் சென்றடைந்துவிடும் என்ற பயம் ஒரு பக்கம்: இரவில் வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுத்திரியும் இந்தியப் படையினர் காதுகளில் முனகல் சத்தம் விழுந்துவிட்டாலும் நிலமை ஆபத்திற்கு இட்டுச் சென்றுவிடும். மிகவும் அச்சமான, ஆபத்தான சூழ்நிலையில் அன்று பொட்டம்மானும், அவரது குழுவினரும் தங்கியிருந்தார்கள். இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதே தப்பிப்பதற்கு சிறந்த வழியாக இருந்தது.

பொட்டு அம்மானின் காயங்கள் அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் நிலையை ஏற்படுத்தியிருந்தது. அவரால் நீண்ட தூரம்.முடியாதும் போனது. அவரை ஒரு சாய்மானைக் கதிரையில் இருத்தி போராளிகள் தமது தோள்களில் சுமந்தே நகர்வுகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.

நவிண்டில் பகுதியில் காயமடைந்த போராளிகள் தங்கியிருந்த விடையம் அப்பிரதேச மக்கள் மத்தியில் போதுமான அளவு கசிய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, பொட்டம்மானும், மற்றவர்களும் நெல்லியடியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். நெல்லியடியில் புராதன வீடொன்றில் அனைவரும் தங்கவைக்கப்பட்டார்கள். அப்பிரதேசவாழ் மக்களும், அந்த போராளிகளுக்கு பல வழிகளிலும் உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தார்கள். நெல்லியடியில் ஓரளவு அசுவாசப்பட்டுக்கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

தொடரும்…

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *