ஸ்ரீலங்கா வாழ் பௌத்த தேரர்கள், இனவாத மற்றும் மதவாத அரசியலை கைவிட்டாலே நாட்டில் பிரச்சினைகள் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொதுச் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் தமக்கு பௌத்த தேரர்கள் போதிக்கத் தேவையில்லை எனவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். எல்லே குணவன்ச தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மனோ கனேசன் இந்த விடயத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
எல்லே குணவன்ச தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு இந்த தேரர் இதை போதிக்க தேவையில்லை. 1999ஆம் ஆண்டிலிருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே அர்ப்பணித்துள்ளேன்.
அது மட்டுமல்ல, எனது சொந்த உழைப்பில் நான் சம்பாதித்த பல மில்லியன் பெறுமதியான சொத்துகளையும், பொது காரியங்களுக்காகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன். நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது.
ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள இந்த தேரர் உட்பட மிகப்பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளை, வரப்பிரசாதங்களை உடனடியாக நீங்கள் பொதுக்காரியங்களுக்காக வழங்கி இந்த பணியினை ஆரம்பித்து வையுங்கள்.
கெளதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப்பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை, பணம் இல்லை” என்ற பெளத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் பரவாய் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.