பொலிகண்டிப் பிரகடனம் : அடுத்தது என்ன? -நிலாந்தன்

பொலிகண்டிப் பிரகடனம் : அடுத்தது என்ன? -நிலாந்தன்

பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு நினைவுக் கற்களை வடமராட்சியில் நடுகை செய்தாயிற்று. அடுத்தது என்ன? ஒரு மக்கள் எழுச்சி இயக்கத்தை தொடங்கியிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது அந்தப் பேரணியை அவர்கள் ஒரு தொடக்கமாக கருதுவதைக் காட்டுகிறதா?

அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவராகிய சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் ஐபிசிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் ஒரு குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு போராட்டம் இதுவென்று கூறினார். எனவே அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பின்றி இதனை இவ்வளவு பிரமாண்டமாக செய்திருக்க முடியாது என்றும் கூறினார்.பேரணி இப்படி பிரம்மாண்டமாக வந்து முடியும் என்று தாங்கள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை என்றும் இது இவ்வளவு பிரம்மாண்டமாக வர அரசியல் கட்சிகளின் ஆதரவும் ஒரு காரணம் என்றும் கூறினார்.

அதாவது பேரணிக்கு ஆட்களைக் கொண்டு வந்து சேர்த்ததில் அரசியல் கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்குண்டு என்பதே உண்மை. ஏனெனில் அரசியல் கட்சிகளிடம்தான் ஒப்பீட்டளவில் கிராம மட்டக் கட்டமைப்புக்கள் உண்டு.அவைகூட போதுமானவை அல்ல.தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் வைத்திருப்பது  போன்ற அடிமட்ட கட்டமைப்புக்கள் எவையும் ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளிடம் இல்லை என்பது எனது தொடர்ச்சியான விமர்சனமாகும்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எனது நண்பரான ஒரு புலமையாளர் அடிக்கடி சொல்வார்……ராணுவப் புலனாய்வுத் துறையிடம்தான் ஒப்பீட்டளவில் பலமான,விரிவான கிராம மட்ட வலையமைப்பு உண்டு.அந்த அளவுக்கு கட்சிகளிடமோ அல்லது செயற்பாட்டு இயக்கங்களிடமோ எதுவும் கிடையாது என்று. அதுதான் உண்மை.

தமிழ் பகுதிகளில் கிராமங்கள் தோறும் உள்ள இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பு மிகபலமானது.அது வினைத்திறனுடைய  அதிக சம்பளம் வழங்கும் ஒரு கட்டமைப்பு. அடுத்தது கட்சிகளின் கட்டமைப்பு. அது ஒப்பீட்டளவில் பலவீனமானது எனினும் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் கட்சிகள் ஒப்பீட்டளவில் அந்தக் கட்டமைப்பை ஓரளவுக்குப் பேணுகின்றன.

அடுத்தது,அரச சார்பற்ற நிறுவனங்கள்.இவர்களிடமும் ஒரு கட்டமைப்பு உண்டு. எனினும் முன்னைய இரண்டோடும் ஒப்பிடுகையில் அது சிறியது. ஆனால்,இவ்வாறான கட்டமைப்புக்கள் எவையும்  தமிழ் சிவில் சமூகங்களிடம் இல்லை என்பதே இங்குள்ள பாரதூரமான வெற்றிடமாகும். கடந்த பத்தாண்டுகளில் எந்தவோர் சிவில் சமூகமும் இவ்வாறான பொருத்தமான செயற்பாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்கவில்லை.

குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களும் இதுபோன்ற கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்புக்களை உருவாக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டளவில் ஓரரசியல் இயக்கமாக எழுச்சி பெற்றது. ஆனால் அது விக்னேஸ்வரன் தொடர்பான சர்ச்சைகளாலும் அந்த அமைப்புக்குள் அங்கத்தவர்களாக இருந்த இரண்டு பங்காளிக் கட்சிகள் தங்களுக்கிடையே மோதிக்கொள்ளத் தொடங்கிய பின்னும் குறிப்பாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்பின்  ஏறக்குறைய  சோர்ந்து விட்டது. அதற்கு அடிப்படைக் காரணம் அது ஒரு பிரமுகர் மைய அமைப்பாக மேலிருந்து கீழ்நோக்கித் தொடக்கப்பட்டமைதான். கீழிருந்து மேல் நோக்கிய ஒரு மக்கள் மைய கட்டமைப்பு அந்த அமைப்பிடம் இருக்கவில்லை. அந்த அமைப்பு இப்போது தேங்கி நிற்க இது முக்கிய காரணம். இப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தில்தான் வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து ஒரு பேரணியை நடத்தியிருக்கின்றன.

தமிழ்ப் பரப்பில் கடந்த சில தசாப்தங்களில் ஒப்பீட்டளவில் நீண்ட நாட்கள் நடந்த ஒரு பேரணி இது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் கடந்த பத்தாண்டுகளில் நடந்த பெரிய தொடர் பேரணி இது. வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு சமூகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வரும் ஒரு காலகட்டத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும் கிழக்கிலிருந்து தொடங்கி  வடக்கை நோக்கி வந்திருக்கிறது. எனவே இந்தப் பேரணி தமிழ் மக்களின் அரசியலில் கவனிப்புக்குரியது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் அதை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகத்திடம் ஒரு பலமான கீழ்மட்டக் கட்டமைப்பு இருக்கவில்லை என்பது. உண்மையில் அப்படி ஒரு சிவில் சமூகம் அந்த பேரணிக்கு முன் இருக்கவேயில்லை. 2009லிருந்து தமிழ் சிவில் சமூக அமையம் என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. பெருமளவுக்கு அறிக்கை அமைப்பாகவே அது காணப்படுகிறது. எனினும் 2009க்கு பின் கூட்டுத்துக்கத்தாலும் கூட்டுக் காயத்தாலும் கூட்டு அவமானத்திலும் அமுங்கிப் போயிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்  ஒரே சிவில் குரலாக அது ஒலித்தது. ஆனால் அந்த சிவில் சமூக அமையத்திடமும் ஒரு பலமான கீழ்மட்ட கட்டமைப்பு இருக்கவில்லை. அது பெருமளவுக்கு புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்களைக் கொண்ட ஒரு கொள்கை உறுதி மிக்க கட்டிறுக்கமான அமைப்பத்தான். ஆனால் மக்கள் மயப்பட்ட சிவில் நடவடிக்கைகளில் அது பெருமளவுக்கு இறங்கவில்லை.

2015 இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த கையோடு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவ அமைப்புடன் இணைந்து ஒரு பேரணியை அந்த அமைப்பு ஒழுங்குபடுத்தியது. நான்காயிரத்துக்கும் குறையாதவர்கள் பங்குபற்றிய அந்தப் பேரணி 2009க்குப் பின் நடந்த பெரிய பேரணிகளில் ஒன்று. எனினும் தமிழ் சிவில் சமூக அமையம் கீழ்மட்டக் கட்டமைப்பை கொண்ட ஒரு அமைப்பல்ல.

அதுபோலவே மற்றொரு அமைப்பு முல்லைத்தேவை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டது.தமிழ் மரபுரிமை அமைப்பு என்றழைக்கப்பட்ட அவ்வமைப்பும் தொடக்கத்தில் ஒப்பீட்டளவில் பெரிய ஆர்ப்பாட்டத்தை முல்லைத்தீவில் முன்னெடுத்தது. எனினும் அவ்வமைப்பும் துடிப்பாக தொடர்ந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் திடுதிப்பென்று உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகம் என்ற அமைப்பு இப்படி ஒரு பேரணியை நடத்தியது என்பது எதைக் காட்டுகிறது?
அந்த அமைப்பிடம் பலமான அடிமட்டக் கட்டமைப்பு இருக்கவில்லை. சில கிழமைகளுக்குள் அப்படி ஒரு கட்டமைப்பை கட்டியெழுப்ப  முடியாது.  ஆயின், அவ்வாறான கட்டமைப்புக்களெதுவும் இல்லாத ஒரு சிவில் அமைப்பு எப்படி திடீரென்று தோன்றிய உடனேயே ஒரு பேரணியை நடத்த முடிந்தது?

காரணங்கள் மிகவும் எளிமையானவை

முதலாவது காரணம்- மக்கள் போராடத் தயாராக இருக்கிறார்கள் என்பது. பொருத்தமான தருணத்தில் பொருத்தமான அறவழிப் பாதை திறக்கப்பட்டால் மக்கள் துணிந்து  வீதியில் இறங்குவார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அமுக்கப்பட்டிருக்கும் உணர்வுகளை வெளிக்காட்ட அவர்களுக்கு சந்தர்ப்பம் தேவை அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த போது மக்கள் தெருவில் இறங்கினார்கள். எனவே மக்கள் போராட தயாராக இருந்தார்கள் என்பதே இந்த பேரணி பெற்ற வெற்றிக்கு முதல் காரணம்.

இரண்டாவது காரணம்-அரசியல் கட்சிகள் அந்தப் பேரணியில் பங்குபற்றியது.அதனால் அக்கட்சிகளின் ஆதரவாளர்களும் கட்டமைப்புக்களும் அந்தப் பேரணியை ஒழுங்கமைக்க உதவின.
குறிப்பாக பேரணியின் தொடக்கத்தில் சுமார் முப்பது பேர்களுடன் பேரணி புறப்பட்டபோது அதில் காணப்பட்ட மக்கள் பிரநிதிகளும் அரசியல்வாதிகளும் துணிந்து போலீஸ் தடையை உடைத்துக் கொண்டு   முன்னேறினார்கள்.மழைக்கும் படைத்தரப்பின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் பேரணி அட்டாளைச்சேனை வரை முன்னேறியதற்கு சாணக்கியனும் ஏனைய அரசியல்வாதிகளும் ஒரு காரணம் என்று அதில் கலந்துகொண்ட மதகுருக்கள் கூறுகிறார்கள்.

மூன்றாவது காரணம்-போலீசாரும் அரச படைகளும் ஒருகட்டத்திற்கு மேல் பேரணியை மூர்க்கமாகத் தடுக்க முற்படாமை.முதலில் போலீசார் பேரணியைத் தடுக்க முயற்சித்தனர். எனினும் ஒரு கட்டத்துக்கு மேல் பார்வையாளராக மாறிய பொலிஸ் தரப்பு நீதிமன்றத் தடையுத்தரவுகளை தன்பாட்டில் வாசித்துக் கொண்டிருந்தது. பேரணி தன்பாட்டில் வளர்ந்து கொண்டிருந்தது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலும் சட்ட மறுப்பாக பேரணி முன்னெடுக்கப்பட்டது. எனவே இது விடயத்தில் பொலிஸாரோ நீதிமன்றமோ பொதுமக்களுக்கு எதிராக அல்லது செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கூர்மையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அதுமட்டுமல்ல படைத்தரப்பு பெருமளவுக்கு முகாம்களுக்குள் முடங்கியிருந்தது. பேரணி நகர்ந்த வழிநெடுக  படைத்தரப்பின் அதிகரித்த பிரசன்னத்தை பெரும்பாலும் காண முடியவில்லை. இது விடயத்தில் அரசாங்கம் புத்திசாலித்தனமாகவும் சமயோசிதமாகவும் நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஜெனிவாவை நோக்கிச் செல்லும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற பேரணிகளைக் குழப்பி தன்னை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்க அரசாங்கம் தயாரில்லை.  இதை மறுவளமாகச் சொன்னால் அரசாங்கம் ஜெனிவாவை எதிர்கொள்ள புத்திசாலித்தனமாக திட்டமிடுகிறது என்று பொருள்.

இவ்வாறு அரசதரப்பு சட்டத் தடைகளை கறாராக,கண்டிப்பாக அமல்படுத்தவில்லை என்பதும் பேரணி வளர ஒரு காரணம். அதேசமயம் பெருந்திரள் மக்கள் போராட்டமாக பேரணி வளரத் தொடங்கியபின் அரசு தரப்பால் அதைத் தடுத்து நிறுத்த முடியாமல் போயிற்று என்ற தர்க்கமும் உண்டு.இந்த மூன்று காரணங்களினாலுந்தான் பேரணியானது ஏற்பாட்டாளர்கள் கற்பனை செய்திருக்காத அளவுக்கு வளர்ச்சி பெற்றது. எனவே இம்மூன்று காரணங்களில் இருந்தும் ஏற்பாட்டாளர்களும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும்  கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பேரணி ஒரு தொடக்கமே. பேரணி செய்தோமா நினைவுக் கல்லை நட்டோமா ஊடகங்களில் தோன்றி சரி பிழை சொன்னோமா என்பதோடு முடிந்து போகிற ஒரு விடயம் அல்ல இது.பேரணியில் முன்வைக்கப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்த உரிய செயல்பூர்வ ஏற்பாடுகள் வேண்டும். அதைக் குறித்த தீர்க்கதரிசனம் மிக்க ஒரு  வழி வரைபடம் வேண்டும். அதை முன்னெடுக்கத் தேவையான சிவில் தலைமைகள் வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் சிவில் அமைப்புக்கள்  தங்களுடைய கீழ்மட்டக் கட்டமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும்.கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்பைக் கொண்ட ஒரு தமிழ்த் தேசிய மக்கள் இயக்கத்தை  உருவாக்கவில்லையென்றால் பொலிகண்டிப் பிரகடனம் பேப்பர் பிரகடனமாக மாறக்கூடிய ஆபத்தும் உண்டு.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *