போராட்டத்தை நடத்தி மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி

போராட்டத்தை நடத்தி மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து, பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இரா.சாணக்கியன்,

இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவினால் எனக்கு மூன்றாம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனை தடை செய்யுமாறு உத்தரவு கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த விடயம் தொடர்பாக கொரோனாவினை காரணம் காட்டி, கொரோனா காலப்பகுதியில், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், சமூக இடைவெளியினை பேணாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படக் கூடாது எனச் சொல்லி நீதிமன்றங்களை நாடியுள்ளனர் பொலிஸார்.

ஆனால் கொழும்பில் கிழக்கு முனையம் துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸாரினால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏன் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரினால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

அதற்கு முன்னரான காலப்பகுதியில், அதாவது கொரோனா ஆகக்கூடுதலாக இருந்த காலப்பகுதியில் கூட இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கு, நடைபவணி செய்ததற்கு தடை உத்தரவு எடுக்காத பொலிஸாரினால்,

ஒரு ஜனநாயக விரோதமான அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை வேடிக்கையான விடயம்.

இது நான் எதிர்பார்த்த ஒரு விடயம் தான். எனக்கு பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன.

இதில் குறிப்பாக ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு இனங்களுக்களுக்கெதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளை தூண்டும் விதமாக நாங்கள் செயற்படுவோம் எனக்கூறி,

இந்த தடை உத்தரவினை எடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அப்படியாக இருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும்.

இந்தப் போராட்டம் அமைதியான போராட்டம். 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாஸா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத்தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் விவகாரம் உள்ளிட்ட ஜனநாயகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *