புகழ்பெற்ற லார்ட்ஸ் மண்ணில் கிரிக்கெட் உலகக்கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமெனில் அதற்கு முதல்படி இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும் என்பதே.
ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து. இவ்விரண்டில் ஏதாவதொரு அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் என்பது உறுதியாகிவிட்டது.
இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழையப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியைக் காண மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அன்றைய தினம் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தோனி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். ஹர்திக் பாண்ட்யா அப்போது இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவு எழுதியிருந்தார்.
தோனியுடன் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது போன்ற ஒரு காணொளியை பதிவிட்டு ” உங்களுடன் செலவிடும் ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்றுக்கொள்ளவும் மென்மேலும் வளரவும் உதவும் வாய்ப்பாக உள்ளது. என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய ரோல் மாடல்களில் ஒருவர் நீங்கள். அதற்கு நன்றி” என பதிவிட்டிருந்தார். 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் விரும்பப்பட்ட பதிவாக அது இருந்தது.
முதல் டி20 உலகக்கோப்பை(2007), ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) என மூன்று ஐசிசி கோப்பைகளை தோனி தலைமையில் இந்தியா குறுகிய காலகட்டத்தில் வென்று சர்வதேச அரங்கில் சாதித்தது. 2023-ல் நடக்கும் உலகக்கோப்பையில் நிச்சயம் தோனிக்கு இடமிருக்காது என்பதால், விராட் கோலி 2019 உலகக்கோப்பையை வென்று லார்ட்ஸ் மைதானத்தில் தோனியுடன் வலம் வர வேண்டும் என தங்களது விருப்பங்களை பல்வேறு வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர் இந்திய அணியின் ரசிகர்கள்.
ஆகவே ஜூலை 9 தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானதொரு நாளாகவே இருந்தது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிதானமாக விளையாடியது. ஆட்டத்தின் 45-வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார் கோலின் டி கிரந்தோம். அதற்கு அடுத்து ஒன்பது பந்துகள் வீசப்பட்டிருந்த நிலையில் மான்செஸ்டரில் பெய்த மழை அன்றைய ஆட்டத்தையே முழுமையாக பாதித்தது. வலுவான பேட்டிங் படையை வைத்திருந்த இந்திய அணிக்கு எதிராக அப்போது 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது நியூசிலாந்து.
ஜூலை 10 அன்று, முந்தைய நாளில் தடைபட்ட ஓவரிலிருந்து ஆட்டம் துவங்கியது. இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு வைத்தது நியூசிலாந்து. முதல் 10 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது. அப்போது இந்தியா எடுத்திருந்த ரன்கள் வெறும் 24.
அதன்பின்னர் ரிஷப் பந்த் அவுட் ஆக, 23-வது ஓவரில் தோனி களத்தில் நுழைந்தார். அப்போது இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் 169 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற நிலை. கைவசம் 5 விக்கெட்டுகள்தான் இருந்தது. ஹர்டிக் பாண்ட்யாவும் தோனியும் இணைந்தனர். 62 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் எடுத்திருந்த ஹர்டிக்கும் அவுட் ஆனார்.