யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் A.B போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் முன்றாவது வருட மாணவனான பயின்று வந்த மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா மரணமடைந்த மாணவன் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.மேலும் குறித்த சம்பவத்தில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஒரு புலன் விசாரணையினை மேற்கொள்ளுமாறு மன்றில் கோரினார். முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் கோப்பாய் காவல்துறையினரிடம் தகவல்களை வழங்குமாறு நீதவான் பணிப்புரை விடுத்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணை இன்று புதன்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பிலான தகவல்கள் பதியப்பட்டு உள்ளதாகவும் தொலைபேசி இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அதனை துரிதமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.இதேவேளை, தொலைபேசியின் இரசாயணப் பகுப்பாய்வு அறிக்கையை பெறுவதற்கு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அறிவிப்பதாகவும் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பிலான அறிக்கையினை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.