நாடளாவிய ரீதியில் கொடிய தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த வேளையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஒரு வருடத்தின் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2020 ஆகிய திகதிகளில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 11 கைதிகளை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணை்ககுழுவின் தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அங்கு பல சிறை அதிகாரிகளையும் பார்த்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த பின்னர், வெளியில் வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்குவதால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
மஹர சிறைச்சாலை படுகொலையை நேரில் கண்ட சாட்சிகளை சிறைச்சாலை நிர்வாகம் சித்திரவதை செய்து சிறைச்சாலைக்குள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கைதிகள் குழுவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மஹர சிறைக்கு மாற்றியதன் மூலம் மஹர சிறைச்சாலையில் போராட்டம் தூண்டப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு டிசம்பர் 2020 இல் தெரிவித்திருந்தது.கைதிகளின் போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலுக்கு நெரிசல் உள்ளிட்ட மூன்று முக்கிய விடயங்கள் காரணமாக அமைந்திருந்ததாக ஆணைக்குழுவின் அப்போதைய தீர்மானம் அமைந்திருந்தது.11 பேரைக் கொன்று 100இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த மஹர சிறைப் படுகொலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது தற்போது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.