தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கை உள்ளடக்கியதாக பிராந்திய சபைகளை அலகாகக் கொண்ட முறைமை, தற்போதைய மாகாண சபைகள் முறைமைக்குப் பதிலாக ஏற்படுத்தப்படவேண்டுமென புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக எதிர்க்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசின் தன்மையானது மத்தியினதும் பிராந்தியங்களினதும் நிறுவனங்களாலான ஒரு சுதந்திரமான, இறைமையுடைய, சுயாதீனமான ஐக்கிய [ஒன்றுபட்ட] குடியரசாக இருக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பானது பிராந்தியத்தின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டுமெனவும் யோசனையில் முன்மொழிந்துள்ளது.
ஆளுகை அடிப்படையில் அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களில் , மேற்கூறிய பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் ஒரு பிராந்திய சபையைக் கொண்டிருக்க வேண்டும் என்று முன்மொழிவு கூறுகிறது, சபையின் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியால் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமெனவும் பின்னர் சபையின் அங்கீகாரத்துக்கு விடப்படவேண்டுமெனவும்,குறித்த பிராந்தியத்தின் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபை அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயற்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சபைகள் சில விடயங்களில் சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்டி ருக்கும்.தேசியக் கொள்கையைப் பொறுத்தவரை, அனைத்து பிராந்தியங்களுடனும் கலந்தாலோசிக்கப்படுவதுடன் அவற்றின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அத்துடன் தேசியக் கொள்கை சட்டவரையறை கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும், பிராந்தியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயத்தைப் பற்றிய சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும், மேலும் அவை பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தைக் குறைக்காது. இந்த சட்டமூலங்களுக்கு வாக்களிப்பதன் மூலம் சபைகள் ஒப்புதல் அளித்தால், மத்திய சட்டவாக்கசபை [ பாராளுமன்றம்] பகிர்ந்தளிக்கப்பட்டவிடயங்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்க முடியும்.
மேலும், அதிகாரப் பகிர்வை பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விட யத்தில்,ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் ஒரு பிரதிநிதித்துவ தூதுக்குழுவின் ஒப்புதலுடன் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் அங்கீகாரம் இருக்க வேண்டும். தேசியபந்தோபஸ்து, தேசிய பாதுகாப்பு, ஆயுதப்படைகள், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் தேசிய பொருளாதார விவகாரங்கள் மத்திய அரசுடன் அவசியம் இருக்க வேண்டும் – இவை தவிர பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் வழங்க வேண்டிய விடயங்கள் மற்றும் செயற்பாடுகளின் பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.
இதில் ஏனையவற்றுடன் , நிலம் (மத்திய பட்டியலில் உள்ள ஒரு விடயத்திற்கு மத்திய அரசு பயன்படுத்தும் அரச காணி தவிர), சட்டம் ஒழுங்கு, பிராந்திய பொலிஸ் சேவை (தேசிய பொலிஸ் படையால் கையாளப்பட்டவை தவிர மற்ற அனைத்துக் குற்றங்களும் அடங்கும்), கல்வி (மூன்றாம் நிலை கல்வி உட்பட), சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் கட்டுமானம், விவசாயம் மற்றும் விவசாய சேவைகள், நீர்ப்பாசனம், மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ச்சி, மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உள்ளூர் அரசு, பிராந்திய பொதுச் சேவை, மத மற்றும் கலாசார விவகாரங்கள், பிற சமூக பொருளாதார மற்றும் கலாசார விடயங்கள் , கூட்டுறவு மற்றும் கூட்டுறவு வங்கிகள், தொழில்கள் மற்றும் வரி விதிப்பு, மத்திய மானியங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு கடன்கள் மற்றும் மானியங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (அந்நிய நேரடி முதலீடு) ஆகியவை உள்ளடங்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூற்றின் பிரகாரம் ‘பிராந்திய பொதுச் சேவை ஆணைக்குழு’ மற்றும் ‘பிராந்திய பொலிஸ் ஆணைக்குழு’ இருக்கும்.மேலும், அரச நிலத்தைப் பொறுத்தவரை, பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் சேனநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின்படி அதன் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும், நிலங்களை சுவீகரித்தல் மற்றும் விடுவிக்கும் அதிகாரம் பிராந்தியங்களுக்கு இருக்க வேண்டும்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உத்தியோகபூர்வ மொழிகளாகவும், நாடு முழுவதும் நிர்வாக மொழியாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. சிங்களமும் தமிழும் தற்போதுள்ள அரசியலமைப்பின் கீழ் உத்தியோகபூர்வ மொழிகளாகும், அதே சமயம் ஆங்கிலம் இணைப்பு மொழியாகும்.
நிறைவேற்று அதிகாரத்தைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறக்கூடிய ஒரு வைபவ ரீதியான ஜனாதிபதி இருக்க வேண்டும் என்றும்,அமைச்சரவையின் தலைவராக இருக்கும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் செயற்படுவதாகவும், விடயங்களை ஒதுகீடு செய்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரம் உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.
சட்டமன்றத்தைப் பொறுத்தவரை, பாராளுமன்றம் இரு தரப்பு சட்டமன்றமாக இருக்க வேண்டும், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அவை மற்றும் பிராந்தியங்களின் பிரதிநிதிகளால் ஆன இரண்டாவது அவை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதிகாரப் பகிர்வைப் பாதிக்கும் திருத்தங்களின் விடயத்தில், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு அதிகமாகவும் , இரண்டாவது அவையிலுள்ள அனைத்து பிராந்திய பிரதிநிதிகளின் அங்கீகாரமும் அதற்கு இருக்க வேண்டும்.
நீதித்துறையைப் பொறுத்தவரை, பாராளுமன்றம் மற்றும் பிராந்திய சபைகள் உருவாக்கிய சட்டம் தொடர்பான அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு ரீதியான விளக்கத்தின் விடயங்களையும் கேட்டுத் தீர்மானிக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.
மேலும், அடிப்படை உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை விசாரணை செய்வதற்கு மாகாண மேல் நீதிமன்றங்கள் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.