ஆப்கானில் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இணைந்து கல்விகற்க முடியாதென தலிபான்கள் அறிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஆண் மற்றும் பெண் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கல்விகற்க முடியாதெனவும் அவர்கள் தமது கல்வியை இஸ்லாமிய சட்டத்தின்படி தனியாகவே கற்கவேண்டுமெனவும் பதில் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளதாக ஆப்கானை தளமாக கொண்டியங்கும் ‘ரோலா செய்திச்சேவை’யின் செய்தியாளர் ஷியார் கான் யாத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆண் ஆசிரியர்கள் பெண் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க கூடாதென தலிபான் உயர் கல்வி அமைச்சர் மௌலவி அப்துல் பாக் ஹக்கானி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதாக சுயாதீன ஊடகவியலாளர் பாஷ்கிர் அகமட் குவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதிலிருந்து, அவர்களது ஆட்சியின் கீழ் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வேலை மற்றும் படிப்பதற்கான மனித உரிமை மீண்டும் மறுக்கப்படும் என்ற கவலை பரவலாக உள்ளது.