மாவீரர்களை நினைவு கூர்ந்தமையால் நாடாளுமன்றில் சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு

மாவீரர்களை நினைவு கூர்ந்தமையால் நாடாளுமன்றில் சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராடி உயிர்நீத்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நினைவு கூர்ந்தமையால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை குறுக்கீடு செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, அவருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் திருவுருவப்படத்துக்கு அவரது தாயாரோடு இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் சுடர் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த கப்டன் பண்டிதர், 1985 ஜனவரி 9 ஆம் திகதி அச்சுவேலிப் பகுதியில் நடந்த மோதலில் உயிர்நீத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது நினைவஞ்சலியில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டமையினால் நாடாளுமன்றத்திற்கு அகௌரவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

எனினும் அமைச்சரின் எதிர்ப்பை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தாம் நினைவேந்தலில் கலந்துகொண்டதை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

அவரது தாயார் தனது சட்டத்துறையில் மிகநெருங்கியவர் என்று குறிப்பிட்ட சுமந்திரன், தென்னிலங்கையில் ஜே.வி.பியினரின் கலவரத்தின் பின்னர் உயிர்நீத்தவர்களை மாவீரர்கள் என்ற பெயரில் நினைவுகூர்வதை எதிர்க்காதவர்கள், ஏன் வடக்கில் இடம்பெற்ற போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதை எதிர்க்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன் உயிர்நீத்த ஒவ்வொருவரையும் நினைவுகூர்வதற்கு அவர்களுடைய பெற்றோருக்கு உரிமையிருக்கின்றது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.

இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்தக் கருத்தினால் கடும் கோபமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான அட்மிரல் சரத் வீரசேகர,

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜே.வி.பியினரை ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன் ஜே.வி.பியினரது போராட்டத்தை நியாயப்படுத்திக் காண்பித்தார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்காகவே போராடினார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், அவர்களை நினைவுகூர்ந்ததினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஓர் இனவாதி என்றும் அவர் முத்திரைப் பொறித்தார்.

இந்த இருவரது வாக்குவாதத்தினால் சபையில் கடுமையான கூச்சல் நிலைமை ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தலையீடு செய்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இருவரது வாக்குவதத்தை தடுத்து சபையை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *